3 அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த கோர்ட் முடிவு.. பொன்முடியை தொடர்ந்து மூவருக்கு பெரிய சிக்கல்!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு நாளை தண்டனை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோக உள்ளதாகத் தெரிகிறது.
ஐகோர்ட் தீர்ப்பால் மேலும் 3 அமைச்சர்களும் அதிர்ந்து போய் உள்ளனர்.
கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்தைவிட ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2017ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன், நேற்று, அமைச்சர் பொன்முடி மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதி (நாளைக்கு) தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரிலோ அல்லது காணொளிக் காட்சி மூலமாகவோ ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் பொன்முடி, எம்.எல்.ஏ பதவியை இழப்பார். தண்டனை விவரம் வெளியிடப்படுவதற்குள், பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அமைச்சர் பொன்முடி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு, மேலும் சில திமுக அமைச்சர்கள் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையும் ஐகோர்ட்டில் நடக்கிறது. அந்த வழக்குகளில் தீர்ப்பு எதிராக வந்தால், அவர்களின் பதவிக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், திமுகவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதேபோல, 2006-2011 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
ஐ.பெரியசாமி, கடந்த 2006- 2011வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதனையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளின் விசாரணையின்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை யூ டர்ன் போட்டுள்ளது என்றும் சரமாரியாக விமர்சித்தது ஐகோர்ட். இந்நிலையில், பொன்முடி வழக்கைப் போல இதிலும் தங்களுக்கு சிக்கல் ஏற்படுமோ என அவர்கள் அச்சத்தில் உள்ளனராம்.