Doctor Vikatan: உடையை நனைக்கும் சிறுநீர்க்கசிவு, வெளியே செல்ல தர்மசங்கடம்… தீர்வே கிடையாதா?
Doctor Vikatan: என் வயது 36.எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டுமே சுகப்பிரசவங்கள். பெண் குழந்தை பிறந்து 6 வருடங்களும் ஆண் குழந்தை பிறந்து 3 வருடங்களும் ஆகின்றன.
பிரசவித்த நாள் முதலே, நான் அவதிப்படும் பெரும் பிரச்னை, சிறுநீர்க்கசிவு. காலநிலை மாற்றம், தூசு அலர்ஜி போன்ற பிரச்னைகளால் தும்மல்
வரும்போதெல்லாம் சிறுநீர்க் கசிவு ஏற்பட்டு, ஆடையெல்லாம் நனைந்து தர்ம சங்கடமாகி விடுகிறது. சைனஸ் பிரச்னையும் இப்போது தலைதூக்கி இருக்கிறது. நான் எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த பயத்தோடே செல்ல வேண்டி இருக்கிறது. எங்கள் பகுதியில் எனக்கு பிரசவம் பார்த்த அனுபவம் வாய்ந்த பெண் மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெற்றேன். அந்த மருத்துவர் இந்தப் பிரச்னையெல்லாம் சுகப்பிரசவத்திற்குப் பிறகு எல்லா பெண்களுக்கும் இருக்கும் வழக்கமான ஒன்று தான் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்தப் பிரச்னையால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி யாரிடமும் சகஜமாக இருக்க முடிவதில்லை. என் மன உளைச்சல் தீர நல்லதொரு தீர்வைச் சொல்லுங்கள்.
சுகப்பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் சிறுநீர்க் கசிவு பிரச்னைக்கு ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ ( Stress urinary incontinence ) என்று பெயர்.
அதாவது தும்மினாலோ, இருமினாலோ, பலமாகச் சிரித்தாலோ, மாடிப்படிகளில் ஏறி இறங்கினாலோ, வேகமாக நடந்தாலோ சிறுநீர்க் கசிவதை உணர்வதுதான் ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’. பெரும்பாலான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால் அதே சமயம் உங்கள் மருத்துவர் சொன்னது போல இதை சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டும் என்ற அவசியம் இன்று இல்லை.
சிறுநீர்க் கசிவு பிரச்னையை சரிசெய்ய இன்றைய நவீன மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சைகள் இருக்கின்றன. முதலில் நீங்கள் மகப்பேறு மருத்துவரை சந்தித்து இது ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ பிரச்னைதானா அல்லது ‘அர்ஜ் இன்கான்டினென்ஸ்’ (Urge incontinence) எனப்படும் இன்னொரு வகை பிரச்னையா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.