ரூ.6,000 பெற ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ரூ.6,000 உதவித் தொகையைப் பெற ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் சென்னையில் மட்டும் ரேஷன் கார்டு இல்லாத 4.90 லட்சம் பேர் நிவாரண தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் விண்ணப்பங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, சென்னையில் முழுமையாகவும், இதர 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கும் நியாயவிலை கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் கடந்த 9-ம் தேதி அறிவித்தார்.
பயனாளிகள் பட்டியல் அடிப்படையில், நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் கடந்த 14-ம் தேதி மாலை முதல் டோக்கன் வழங்கப்பட்டது. கடந்த 17-ம் தேதி முதல் நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக விநியோகப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாதவர்களும் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்த நிலையில், தற்போது 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.