Actor Karthi: சின்னத்திரைக்கு வரும் கார்த்தி.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே நாம் அனைவருக்கும் தொடர் விடுமுறைகள் தான் நியாபகம் வரும். குடும்பத்துடன் இணைந்து பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என வகை வகையாக பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படும். அதேசமயம் புதுப்படங்கள் இல்லாத பண்டிகையா என்னும் அளவுக்கு இந்த முறை முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வரிசைக்கட்டி இருக்கின்றன.
அந்த வகையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் நடித்துள்ள அச்சம் என்பது இல்லையே ஆகிய 3 படங்கள் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் இன்னும் ரீலிசாகுமா அல்லது தள்ளிப்போகுமா என தெரியாமல் உள்ளதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிவியில் என்னென்ன புதுப்படங்கள் ரிலீஸாகிறது, என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் சின்னத்திரை ஆடியன்ஸ்களிடம் இருக்கும். தொடர் விடுமுறை என்பதால் சின்னத்திரையில் முன்னணி சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு படங்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவியில் நடிகர் கார்த்தி பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ”கார்த்தியின் உழவர் திருநாள்” என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தில் புதிய உத்திகளை செய்பவர்களுக்கும், விவசாயம் காப்பவர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தும் வருகிறார். தான் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பார்.
இப்படிப்பட்ட கார்த்தியின் இந்த உழவர் திருநாள் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களித்தில் வெகுவாக எழுந்துள்ளது.
கார்த்தியின் திரைப்பயணம்
நடிகர் சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். கடந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் நடிப்பில் ஜப்பான் படம் வெளியானது. ஆனால் இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் செயல்பட்டு வருகிறார். கார்த்தி அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.