வேட்டைக்காரன் படப்பிடிப்பு… தாமதமாக வந்த எம்.ஜி.ஆர் : சின்னப்ப தேவர் என்ன செய்தார்?
திரைத்துறையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை தயாரித்தவர் சாண்டோ எம்.எம்.சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தான்.
இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் இடையேயான நட்புதான். 1956-ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான தாய்க்கு பின் தாரம் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். தேவர் பிலிம்ஸ் தயாரித்த முதல் படமும் இதுதான்.
இந்த படத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக எம்.ஜி.ஆர் – சின்னப்ப தேவர் இருவரும் பிரிந்த நிலையில், சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, 1961-ம் ஆண்டு தாய் சொல்லை தட்டாதே என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். அதன்பிறகு இந்த கூட்டணி வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்தது.
எம்.ஜி.ஆர். – சின்னப்பதேவர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில், எம்.ஜி.ஆர் தாமதமாக வந்தால், கோபத்தில் சின்னப்ப தேவர் கடுமையாக நடந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 1964-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிவாஜியின் வரலாற்று படமான கர்ணன் படத்துடன் மோதியது.
இதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்ணன் திரைப்படம் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படத்துக்கு இணையாக வரவேற்பை பெறவில்லை என்று தகவல் உள்ளது. வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் தொடர்ந்து தாதமாக வந்துள்ளார். அப்படி ஒருநாள், படப்பிடிப்பு தளத்தில் அனைத்தும் தயாராக இருந்தபோது, நாயகி சாவித்ரியும் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எம்.ஜி.ஆருக்கான காத்திருந்த நிலையில், அவர் சரியான நேரத்திற்கு வராததால், அருகில் இருந்தவர்கள் மீது சின்னப்ப தேவர் தனது கோபத்தை காட்டியுள்ளார். இதில் டீ கொடுக்க வந்த பையனிடம், ஏய் என்ன பண்ற டீ கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு என்று கேட்டு அவரை அடிக்க போக, அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் வந்துவிடுகிறார்.
அண்ணே அவன் மேல் தப்பு இல்லை நான் தான் லேட்டாக வந்தேன். சிலோனில் இருந்து என்னை பார்க்க சிலர் என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அதனால் தான் லேட்டாகிவிட்டது என்று சொல்ல, அய்யோ முருகா நீங்க எப்போ வந்தீங்க நான் உங்களை சொல்லவே இல்லையே என்று சின்னப்ப தேவர் கூறியுள்ளார். ஒரு தயாரிப்பாளராக நடிகர்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வர வேண்டும் என்பது சின்னப்ப தேவர் விருப்பம்.
அதே சமயம் எம்.ஜி.ஆர் சரியான நேரத்தில் வராமல் இருந்தால். அவரை நேரடியாக திட்டாமல், அருகில் இருக்கும் நடிகர் அசோகனை தான் சின்னப்ப தேவர் கடுமையாக திட்டுவாராம். இந்த தகவலை பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.