ஆசியாவின் பெரும் பணக்காரர்… விட்ட இடத்தை அதிரடியாக பிடித்தார் அதானி
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற இடத்தை இழந்திருந்த கௌதம் அதானி, போராடி மீண்டும் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதானி குழுமத்தின் சார்பாக 2 நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் அதானி பங்குகள் வெகுவாய் உயர்ந்ததில் , ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற தனது பழைய இடத்தை அதானி மீண்டும் பிடித்துள்ளார்.
பல ஆண்டுகளாக அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், மிக அதிக அளவில் கடன் இருப்பதை மறைத்து புதிய கடன்களை பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.
அதானிக்கு ஆளும் பாஜக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மத்தியில் ஆசிர்வாதம் அதிகம் என்பதால், ஹிண்டன்பர்க் அறிக்கை அரசியலிலும் புயலைக் கிளப்பியது. அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாய் சரிந்ததில், பல்லாயிரம் கோடிகளை கௌதம் அதானி இழந்தார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை விசாரிக்கும்படி தொடுக்கப்பட்ட வழக்குகளை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டே நீதிமன்றத்தில் இக்குழு தனது அறிக்கையை சமர்பித்து இருந்தது. அதன் அடிப்படையிலான தீர்ப்பினை ஜன.3 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதானி மீதான களங்கத்தை துடைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்தது.
இதனை வாய்மை வென்றதாக அதானி வரவேற்றார். தொடர்ந்து சரிந்திருந்த அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் ஏகமாய் உயர்ந்தன. இதனால் அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எகிறி, 97.6 பில்லியன்டாலர் என்பதில் நிலைகொண்டது.
இதன் மூலம் ஆசியாவின் பெரும் பணக்காரர் இடத்திலிருந்த முகேஷ் அம்பானியை முந்தி அந்த இடத்தை மீண்டும் அதானி பிடித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அதிபரான முகேஷ் அம்பானி 97 பில்லியன் டாலருடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.