பொங்கல் பரிசு ரூ.1000 வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்…
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் பச்சரிசி, முந்திரி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு, அந்த பொங்கல் தொகுப்போடு சேர்ந்து ரூ.1,000 வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழர்திருநாள் தைப்பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1,000 பரிசு தொகை வழங்கப்படாதது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த சூழலில் தற்போது, பொங்கல் தொகுப்போடு சேர்த்து ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணத்தினை விற்பனை முனைய இயந்திரத்தின் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகாரச் சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைத்தாரர்களுக்கு பதிவேட்டில் உரிய நபர்களின் கையப்பம் பெற்று பொங்கல் பரிசு வழங்க வேண்டும், தொழில்நுட்ப இடையூறு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரங்களில் அதற்குரிய பதிவேட்டில் உரிய ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்காரணத்தை கொண்டும் தகுதியான பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படாமல் இருப்பதை தவிர்க்க வேண்டும், ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறந்து பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும், வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும், வரிசையில் காத்திருந்தவர்களை திருப்பி அனுப்ப கூடாது, பொங்கல் பரிசு காரணமாக பொது விநியோக திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாவண்ணம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.