மர்ம தேசத்தில் மகளோடு சேர்ந்தே இருக்கும் கிம் ஜாங் உன்! காரணம் இதுதான்.. வடகொரியா அதிபரின் பிளான்

மர்மதேசமான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் தற்போது பொது நிகழ்ச்சிகளில் தனது மகளை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா.. சீனாவை போல் மர்மதேசமாக இருக்கும் சிறிய நாடு. மொத்தம் 2.6 கோடி மக்கள் தொகையுடன் இருக்கும் இந்த நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருக்கிறார். குழந்தை போன்ற முகம்.. கருப்பு நிற கோட் சூட்டுடன் போட்டோ, வீடியோக்களில் காணப்படும் கிம் ஜாங் உன் உண்மையில் அப்படிப்பட்ட குணம் கொண்டவரா என்றால் அதுதான் இல்லை.
உலகின் பெரிய வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவை எதிர்க்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் அதனை தொடர்ந்து செய்து வருபவர் தான் கிம் ஜாங் உன். அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை அடிக்கடி அவர் மேற்கொண்டு வருகிறார். மேலும் அணு ஆயுதங்களையும் அவர் அதிகளவில் வைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்படும் நாடுகளை வடகொரியா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏற்கனவே தென்கொரியாவுடன் மோதல் போக்கு இருக்கும் நிலையில் அந்த நாடு அமெரிக்காவுடன் சேர்ந்து ராணுவ கூட்டு பயிற்சி மேற்கொண்டது. இதனை விரும்பாத வடகொரியா இன்று திடீரென்று தென்கொரியா மீது தாக்குதல் நடத்தியது. அங்கு போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. இதுதான் கிம் ஜாங் உன்னின் இன்னொரு முகமாகும்.
வெடிக்கிறது கொரிய போர்! தென்கொரியா மீது வடகொரியா திடீர் கடல் வழி தாக்குதல்! வேலையை காட்டிய கிம் ஜோங்
சரி இது இருக்கட்டும். எதிரி நாடுகளை தான் கிம் ஜாங் உன் இப்படி மிரட்டுகிறார் என்றால் சொந்த நாட்டு மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தனது நாட்டு மக்கள் சாப்பிடும் உணவு, பார்க்க வேண்டிய டிவி சேனல், அணிய வேண்டிய உடை, தலைமுடியை எப்படி வளர்ப்பது என அனைத்துமே கிம் ஜாங் உன்னின் உத்தரவுப்படி தான் என உலக நாடுகளின் உளவுத்துறைகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தான் அடிக்கடி கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பும்.
சமீபத்தில் கிம் ஜாங் உன் பொதுவெளியில் நடமாடவில்லை எனவும், அவர் அதிகப்படியான புகை பிடிக்கும் பழக்கத்தால் கிம் ஜாங் உன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதோடு அவரை தொடர்ந்து அவரது சகோதரி வடகொரியாவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் இந்த தகவல் வெளியான அடுத்த சில வாரங்களில் கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கிம் ஜாங் உன் தற்போது அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தனது மகளுடன் பங்கேற்றுவருகிறாராம். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்றும் உள்ளது. இதுதொடர்பான தகவலை தென்கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மகள் இருக்கிறார். இவர் தான் கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். இவரது பெயர் மற்றும் வயது என்ன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இதில் தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது பெயர் கிம் ஷு ஏ என்று இருக்கலாம் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது கிம் ஜாங் உன் தனது மகளுடன் தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராணுவ அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு மற்றும் மீட்டிங்கில் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் தவறாமல் பங்கேற்கிறார். கிம் ஜாங் உன்னின் மகளை பார்க்கும் அதிகாரிகள் அவர் முன்பு மண்டியிட்டு வணங்குகின்றனர். இதுபற்றி தென்கொரியாவின் உளவுத்துறை சார்பில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் உன்னுக்கு இந்த ஒரு குழந்தை மட்டுமின்றி இன்னும் குழந்தைகள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் குறித்த விபரம் எதுவும் வெளிவரவில்லை. தற்போதைய சூழலில் கிம் ஜாங் உன்னுக்கு பிறகு அடுத்த அரசியல் வாரிசாக அவரது மகள் வர அதிக வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. மேலும் தற்போது கிம் ஜாங் உன்னிற்கு 40 வயது ஆகிறது. அவர் நலமாகவே இருக்கிறார்.
அவருக்கு எந்த உடல் நல பிரச்சனையும் இல்லை. இதனால் தற்போதைய சூழலில் அதிபர் மாற்றம் என்பது நிகழாது. இருப்பினும் கிம் ஜாங் உன் தனது மகளை தனது அரசியல் வாரிசாக கருதி அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்கிறார்” என தென்கொரியாக அதிகாரிகள் கருதுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.