தலைக்கு மேல் தொங்கும் “கத்தி..” இந்தாண்டு வெடிக்க போகும் பூகம்பம்.. ரிஷி சுனக் எப்படி சமாளிப்பாரோ!
பிரிட்டனில் இப்போது ரிஷி சுனக் அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில் அங்கே அடுத்து பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் கடந்தாண்டு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. சில வார இடைவெளியில் அடுத்தடுத்து இரு பிரதமர்கள் பதவி விலகினர். அப்படியொரு இக்கட்டான சூழலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார்.
அப்போது பிரிட்டன் பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது. ரிஷி சுனக் பொருளாதார சிக்கல்களைச் சரி செய்யத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இருப்பினும், பல காரணங்களால் அவரது அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகமாகவே இருந்தது.
எப்போது தேர்தல்: இதற்கிடையே பிரிட்டன் நாட்டில் இந்த ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் தேர்தல் நடக்கலாம் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். சுனக் இப்படிக் கூறிய நிலையில், அங்கே வாக்குப்பதிவு எப்போது நடக்கலாம் என்பது குறித்த விவாதங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டது.
பிரதமர் பதவிக்கு ஆபத்து.. ரிஷி சுனக்கை மொத்தமாக காலி செய்யும் “அந்த” ஒரு மசோதா.! கடும் எதிர்ப்பு
பிரிட்டனைப் பொறுத்தவரைக் கடந்த 2010ஆம் ஆண்டு முதலே அங்கே கன்சர்வேடிவ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. ஒரே கட்சி ஆட்சியில் இருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளில் பிரிட்டன் டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ், ரிஷி சுனக் என 5 பிரதமர்களைப் பார்த்துள்ளது. பிரிட்டன் சட்டப்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற வேண்டும்.
பிரிட்டன் அரசியல்: பிரிட்டனில் கடந்த 2019இல் கடைசியாகச் சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதன்படி பார்த்தால் 2025 ஜன. மாதம் தான் அங்கே தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், அங்கே முன்கூட்டியே தேர்தல் நடக்கக்கூடும் என்பதையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பேச்சு காட்டும் வகையில் இருக்கிறது. ரிஷி சுனக் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நடந்த முக்கிய இடைத் தேர்தல்களில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தோற்றதால் சுனக்கிற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தான் அவர் இப்படியொரு கருத்துகளைக் கூறியுள்ளார்.
மத்திய இங்கிலாந்தின் மான்ஸ்ஃபீல்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிஷி சுனக், “இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பொதுத் தேர்தலை நடத்துவோம் என நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் ஆளும் ரிஷி சுனக் அரசு படுதோல்வி அடையும் என்பதையே இப்போது வரை அங்கு வந்த அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் காட்டுகிறது.
என்ன காரணம்: கடந்த 2008 சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அப்போது பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு அதிகரித்தது. இதன் மூலமாகவே அவர்கள் 2010இல் ஆட்சியைப் பிடித்தனர். இப்போது 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கே இந்தாண்டு மே மாதம் தேர்தல் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. அங்கே மார்ச் 6ஆம் தேதி ரிஷி சுனக் அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதில் வாக்காளர்களைக் கவர வரிக் குறைப்புகளுக்கான அறிவிப்புகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
திட்டம் என்ன: வரி குறைப்பு அறிவிப்பிற்குப் பிறகு உடனடியாக தேர்தலை எதிர்கொள்வதே ரிஷி சுனக் அரசின் திட்டமாக இருக்கிறது. மே மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கே 2024 இறுதியில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பொருளாதாரத்தை நன்றாக நிர்வகிப்பது, வரி குறைப்பு ஆகியவற்றைத் தொடர விரும்புகிறேன். ஆனால் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்கிறேன். எனவே எனக்கு நிறைய வேலை இருக்கிறது. பிரிட்டன் மக்களுக்குச் சேவை செய்வதில் இறுதியாக இருக்கிறேன்” என்றார்.
ரிஷி சுனக் இப்படிக் கூறினாலும் இப்போது கொரோனாவை கையாண்ட விதம், தலைமையில் அடிக்கடி நடக்கும் மாற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவை பிரிட்டன் மக்களை கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராகத் திருப்பியுள்ளது. இதனால் இந்த முறை தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியடையக் கூடும் எனக் கூறப்படுகிறது.