அம்பானி-ஐ ஓரம்கட்டிய அதானி.. ஒரே மாதத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆனார் கௌதம் அதானி..!
பெரும் பணக்காரர்கள் மத்தியில் எப்போதும் யார் அதிகச் சொத்து மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் மறைமுகப் போட்டியிருக்கும், அப்படி இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தைப் பெற்றுள்ளார் கௌதம் அதானி.
இருவருக்கும் மத்தியிலான சொத்து மதிப்பு வித்தியாசம் என்னவோ மிகவும் குறைவு தான், ஆனாலும் முதல் இடத்தைக் கௌதம் அதானி தட்டிப் பறித்துள்ளார். இந்த மாபெரும் மாற்றம் கடந்த 30 – 45 நாட்களுக்குள் நடந்துள்ளது என்பது தான் முக்கியமான விஷயம். இந்திய வர்த்தகத் துறையில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரின் சமீப காலமாகப் பல துறையில் ஒன்றாகப் போட்டிப்போடத் துவங்கியிருக்கும் வேளையில், இவர்களுடைய சொத்து மதிப்பிலும் பெரிய ரேஸ் நடக்கிறது. இந்த ஓட்டபந்தையத்தில் பல மாதங்களுக்குப் பின்பு, கிட்டதட்ட ஒரு வருடத்திற்குப் பின்பு கௌதம் அதானி வென்றுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் இன்று காலை நிலவரத்தின் படி இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பெரும் பணக்காரர் என்ற முக்கிய இடத்தை மீண்டும் கௌதம் அதானி கைப்பற்றியுள்ளார். அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இக்குழுமம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறைந்த காரணத்தால் கௌதம் அதானி சொத்து மதிப்பு உச்ச அளவில் இருந்து சுமார் 40 சதவீதம் வரையில் சரிந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் உச்ச நீதிமன்றம் அதானி – ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரத்தில் அதானி குழுமத்திற்குச் சாதகமாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கும் வேளையிலும் செபிக்கு மீதமுள்ள 2 குற்றச்சாட்டுகளை அடுத்த 3 மாத்திற்குள் முடிக்க உத்தரவிட்டது மூலம் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் கௌதம் அதானி சொத்து மதிப்பும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாகச் சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற கிரீடத்தை முகேஷ் அம்பானியிடம் இருந்து கௌதம் அதானி பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியல் படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 97.0 பில்லியன் டாலர், கௌதம் அதானி சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலர். இந்த நிலையில் அடுத்த போட்டி என்றால் யார் முதலில் 100 பில்லியன் டாலர் அளவீட்டை அடைவது, யார் முதலில் டாப் 10 பட்டியலுக்குள் வருவது.