நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம்
காத்மாண்டு, நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார்.
தொடர்ந்து அமைச்சர்ஜெய்சங்கர் பிரதமர் அலுவலகத்தில் நேபாள பிரதமர் பிரசண்டாவை சந்தித்து பேசினார். இருவரும் இந்திய – நேபாள இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது, வர்த்தகம், பாதுகாப்புத்துறை, பேரிடர் மேலாண்மை, சுற்றுலா, விமான போக்குவரத்து, எரிசக்தி மற்றும் நீர்வளம் உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தினர். இதன்பின், நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.
அடுத்த 10 ஆண்டுக்குஇந்த மின்சாரத்தை இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இது தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. நேபாள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி உருவாக்கிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஒப்பந்தத்திலும் இருநாடுகளும் கையெழுத்திட்டன.முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான ஷீத்தல் நிவாசில், ஜனாதிபதி பவுடலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.