Gun shoot: பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு!
ஈரோடுமாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை போலீசாரை, ரவுடி கும்பல் அரிவாள் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய சிவசுப்ரமணியம் மற்றும் 4 குற்றவாளிகள் பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நெல்லையில் இருந்து வந்த உதவி ஆய்வாளர், ஆன்ட்ரோ மற்றும் 6 போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
இன்று அதிகாலை குள்ளம்பாளையத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அறைக்குள் சென்ற உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோவை குற்றவாளிகள் அரிவாளை கொண்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆன்ட்ரோ தன்னையும் உடன் வந்த காவலர்களையும் காப்பாற்ற துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்குள் இந்த கும்பல் தப்பி தலைமறைவானது. இதையடுத்து போலீஸ் உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ அளித்த புகாரின் அடிப்படையில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலையில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.