“திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப் பின் மனஅழுத்தத்தை எதிர்கொள்கிறேன்” – இலியானா
கர்ப்பகாலத்துக்கு முன்னரும், பிரசவத்துக்குப் பின்னரும் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். காரணமே இல்லாமல் அழுகை, கோபம், மனவருத்தம் வரும். இது பெண்களுக்கு பொதுவானது என்று கூறினாலும், சரியான கவனிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதபோது பிரச்னையில் முடியலாம்.
இந்த நிலையில், `நண்பன்’ திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்குப் பரிச்சயமான நடிகை இலியானா, `போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ என அழைக்கப்படும் மகப்பேறுக்குப் பிறகு, ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் இலியானா. அதன்பின்னர் தன் பார்ட்னர் மைகேல் டோலன் என்பரை மே மாதம் கரம் பிடித்தார். இந்த ஜோடிக்கு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு `Koa Phoenix Dolan’ என்ற பெயர் சூட்டி, குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் இலியானா பதிவிட்டு இருந்தார்.
இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இலியானா, மகப்பேறுக்குப் பிறகான மனஅழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தச் சமயத்தில் அவரின் பார்ட்னர் ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“பெரும்பாலான அம்மாக்களின் குற்றஉணர்ச்சி முற்றிலும் உண்மையானது. ஒருநாள் நான் என்னுடைய அறையில் இருந்தேன். திடீரென நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.
என்னவாயிற்று என பார்ட்னர் என்னிடம் கேட்க, `இது முட்டாள்தனமாக இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் மகன் வேறோர் அறையில் உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றேன்.
குழந்தை பெற்ற பிறகு, இது போன்ற தீவிரமான எமோஷனை நீங்கள் அனுபவிப்பீர்கள். நான் இன்னும் அதை அனுபவித்து வருகிறேன்.