மனவெளிப் பயணம்-எமோஷனல் இன்டெலிஜன்ஸ் அறிவோம்!
நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை அனைவருக்கும் மிகத்தொந்தரவாக இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், உணர்ச்சிகளை கையாளத் தெரியாமல் இருப்பதுதான்.
அதுவும் இந்த டிஜிட்டல் தளத்தில் எந்தெந்த நேரத்தில் என்ன பேச வேண்டும், எந்த உணர்வை அளவாக வெளிப்படுத்த வேண்டுமென்பது தெரியாமல், உணர்ச்சி வசப்பட்டு பல நியூஸ் சேனல்களில் வைரல் நியூஸாக வெகுஜன மக்கள் முதல் ஆளுமைகள் வரை உணர்ச்சிக் கொந்தளிப்பை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
பெரும்பான்மையான மக்கள் உணர்வுகளை சொல்லத் தெரியாமல், ஏதோவொரு தருணத்தில் எரிமலை வெடிப்பது போல், பொங்கியெழும் தருணம் அனைவருமே உணர்ந்தது. இம்மாதிரி பொங்கியெழும் மனநிலையில் நமது வீடா, நண்பர்களா, அலுவலகமா, நடு ரோடா, சமூக வலைத்தளமா என்றெல்லாம் யோசிக்க முடியாது.
அடக்கி வைத்த உணர்வுகளை எல்லாம், உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறி, கத்தி, கூப்பாடு போட்டு விடுவார்கள். டிஜிட்டல் யுகம் வரும் முன், இந்த விஷயங்கள் எல்லாமே அந்தந்த இடங்களில் முடிந்து விடும். ஆனால் இன்று அப்படியல்ல. மேலே சொன்ன மனித உணர்ச்சிகள் எல்லாமே வீடியோவாக, மீம்ஸாக மாறி, சமூகத்தின் கேலி, கிண்டலுக்கு பாரபட்சம் இல்லாமல் மனிதர்கள் வேடிக்கைப் பொருளாக மாறி நிற்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி சார்ந்த மற்றும் புது ஐடியாக்களை வைத்து துவங்கும் தொழில் முனைவோர்களுக்கும் மற்றும் அதில் பங்கேற்கும் இளம் தலைமுறையினருக்கும் புதுப்புது விஷயங்களை வாழ்க்கையில் கற்றுக் கொள்வது போல், இன்று பலரும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் கற்றுக்கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் முன் வருகிறார்கள்.
உணர்ச்சி நுண்ணறிவு என்பது உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது, அத்துடன் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை அடையாளம் கண்டு, அது என்ன மாதிரி பாதிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வதாகும். இந்த சொல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் ஜான் மேயர் மற்றும் பீட்டர் சலோவி ஆகியோரால் உருவாக்கப்பட்டது, ஆனால் பின்னர் உளவியல் நிபுணர் டேனியல் கோல்மேன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது.
”ப்ரீ ஃபிரன்ட்டல் கார்டெக்ஸ்” என்பது மூளையின் முன் பகுதியாகும். இந்தப் பகுதி தான் ஒருவருடன் சண்டை போட வேண்டுமென்று நினைத்தால், உடனே சண்டை போட்டு விடு என்று நமக்கு தெரிவிக்கும். அதே போல் மூளையில் “லிம்பிக் சிஸ்டம்” ஒன்று இருக்கும். இது தான் எமோஷனலையும், இன்டெலிஜென்ஸையும் இணைத்து, வேலையைச் செய்யும்.