Jayam Ravi: “நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் தான் சரி” – அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ஜெயம் ரவி பேச்சு
ஒரு பெரிய நடிகர் என்ற தோரணை இல்லாமல் என்னை கூப்பிட்டு நிறைய விஷயங்களை ஷூட்டிங்கில் கேப்டன் விஜயகாந்த் சொல்லி கொடுத்தார் என நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது மறைவு செய்தி இன்னும் பலராலும் ஏற்றுக்கொள்ளாத முடியாததாகவே உள்ளது. விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தினமும் பொதுமக்களும் , இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், புகழ், செண்ட்ராயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நேற்று இரவு விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, “கேப்டன் விஜயகாந்த் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். எல்லாரும் நல்லா இருக்க வேண்டிய உள்ளம் அவர். நாங்களும் அவர் எப்போதும் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று தான் வேண்டிக்கொண்டு இருப்போம்.
இப்போது அதை நினைத்து பார்க்கிறேன். நடிகர் சங்கம் மட்டுமல்ல, அவர் தன்னை தெரியாத பலருக்கும் நிறைய நல்ல விஷயங்கள் பண்ணிருக்காரு. நல்ல எண்ணம் படைத்த விஜயகாந்த் நம்மிடையே இல்லைன்னு நினைக்கிறப்ப சங்கடமாக இருக்கிறது. அவர் செய்த நல்ல விஷயங்களை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். நடிகர் சங்கத்திலேயும் அதனை செய்வோம் என உறுதி எடுத்துக் கொள்கிறோம். எங்க அப்பாவும், விஜயகாந்தும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள். என்னோட சின்ன வயசில இருந்து விஜயகாந்தை போல வர வேண்டும் என அப்பா சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் நடிக்க வந்தபோது அவர் என்னை கூப்பிட்டு உத்வேகம் அளித்தார். என்னிடம்,‘உங்க அப்பாவை நல்லா தெரியும். அவரும் மதுரைக்காரரு. ஒரே ஊர்க்காரரு’ என சொல்லுவார்.
நான் நடிச்ச தாஸ் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் தான் விஜயகாந்துக்கு நிறைய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தார். ஒரே லொகேஷனில் தாஸ் மற்றும் விஜயகாந்து படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. நான் மரியாதை நிமித்தமாக கேப்டனை சென்று சந்தித்தேன். அப்போது விஜயகாந்த் என்னிடம், ‘ராக்கி சொன்னாரு, நீ என்னை மாதிரியே காலை தூக்கி அடிக்கும் காட்சி உள்ளிட்ட ஸ்டண்ட் எல்லாம் நல்லா பண்றீயாமே’ என கூறி சில அறிவுரைகளும் வழங்கினார். அவ்வளவு பெரிய நடிகர் என்னை கூப்பிட்டு நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார்.