“எதை செய்தாலும் குறை சொல்கிறார்கள்” – தனுஷ்
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர்.
சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். வரும் 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
விழாவில், நடிகர் தனுஷ் பேசியதாவது: இந்தப்படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அனைவரும் அசுரத்தனமான உழைப்பைதந்து உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரனும் அவர் டீமும் கொடுத்த உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை. நான் நிறைய புது இயக்குநரோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனைப் பார்க்கும் போது, வெற்றிமாறன் ஞாபகம்தான் வருகிறது.
‘கேப்டன் மில்லர்’ என்பதன் டேக் லைன், ‘மரியாதைதான் சுதந்திரம்’ என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது? எது சொன்னாலும், எது செய்தாலும்,குறை சொல்ல கூட்டம் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம்,இதை செய்துகொண்டே இருக்கிறது. அதைப்பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம். கேப்டன் மில்லர், ஓர் உலகப்படமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் பேசினார்.