Aus vs Pak: கடைசி இன்னிங்ஸில் சூப்பரான அரைசதம் – விடைபெற்றார் வார்னர்! பாகிஸ்தானுக்கு எதிரான முழுமையாக வென்ற ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 7 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் இருந்த நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
இதையடுத்து இன்று கூடுதலாக 47 ரன்கள் எடுத்த நிலையில் 115 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற முன்னிலை 14 ரன்களை சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 29.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஓபனிங் பேட்ஸ்மேன் கவாஜா டக் அவுட்டானார்.
மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனும், தனது கடைசி இன்னிங்ஸிலும் களமிறங்கிய டேவிட் வார்னர் சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்தார். 57 ரன்கள் எடுத்து சஜித் கான் பந்தில் அவுட்டானார்.
டேவிட் வார்னர் அவுட்டான பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் அவருக்கு கைகளை குலுக்கி விடை கொடுத்தனர். அதேபோல் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்தில் ஆட்டத்தை காண வந்த ரசிகர்கள் கூட்டம் முழுவதும் கரகோஷங்கள் எழுப்பி வார்னரை வழியனுப்பினர்.
தொடர்ந்து லபுஸ்சேன் அரைசதமடித்து 62 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுவதுமாக வென்று சாதனை புரிந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 313 ரன்களில் ஆல்அவுட்டானது. இதன் பின் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சால் 299 ரன்களில் ஆல்அவுட்டானது. 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.
ஆஸ்திரேலியா பவுலர்களில் தரமான பந்து வீச்சால் ரன் குவிக்க திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 115 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸை முடித்த பாகிஸ்தான், 130 என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியாவு நிர்ணயித்தது. இதை சேஸ் செய்த ஆஸ்திரேலியா மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது.
முன்னதாக பெர்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே ஆட்டமாக மெல்போர்னில் நடைபெற்றது. இதில் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. தற்போது சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் இதுதான் தனது கடைசி தொடர் என ஆஸ்திரேலியா ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
ஆஸ்திரேலியா விளையாடும் போட்டிகளில் இனி மைதானத்தில் வார்னரின் துறுதுறு ஓட்டத்தையும், சதமடித்தவுடன் எகிறி குதிக்கும் Vintage Jump கொண்டாட்டத்தையும் பார்க்க முடியாது.