எதற்கு மீண்டும் மீண்டும் சம்பாதிக்க நினைக்கிறீர்கள்? – ஆளவந்தான், முத்து தயாரிப்பாளர்களை விளாசிய பாடலாசிரியர்!

பாடலாசிரியர் பிரியன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் படம் அரணம். அரணம் என்றால் கவசம் என்று பொருள். பாடலாசிரியர் ஆகும் கனவில் சென்னை வரும் இளைஞர்களுக்கு உதவுவதற்கென்று தமிழ்திரைப்பா கூடம் ஒன்றை பிரியன் நடத்தி வருகிறார். இதில் பயிற்சி பெற்ற ராஜாராம் தனது குரு பிரியனுக்காக தமிழ்த் திரைக்கூடம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கிரவுட் பண்டிங் முறையில் அரணத்தை தயாரித்திருப்பதாக ராஜாராம் குறிப்பிட்டார்.

சினிமாவில் பாடலாசிரியராக நுழைவது எத்தனை கடினம் என்பது பிரியனுக்கு தெரியும் என்பதால் தனது தமிழ்ப்பா கூடத்தில் பயற்சி பெற்றவர்களுக்கு பாடல் எழுத முன்னுரிமை தந்துள்ளார். இவர்கள் சினிமாவில் பாடல் எழுதுவது இதுவே முதன்முறை. சென்னையில் நடந்த அரணம் பத்திரிகையாளர் சந்திப்பு குருவுக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக அமைந்தது.

அறிமுக பாடலாசிரியர் பாலா பேசுகையில், “இது எனது முதல் திரைப்படப் பாடல். சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு. எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. காத்துல என்ன தூத்துது எனும் பாடல் அனைவரையும் கவரும். இசையமைப்பாளர் ராஜன் மாதவிற்கு நன்றி. தமிழ்த்திரைப்படக்கூடத்திற்கு என் நன்றிகள். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

அறிமுக பாடலாசிரியர் சஹானா பேசுகையில், “அரணம் படத்தின் ஆரிராரோ எனும் பாடல் தான் என் முதல் பாடல். பிரியன் சாரின் தமிழ்த்திரைப்பா கோர்சில் படித்த போது எழுதிய பாடல். எங்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் எனும் நோக்கில் படத்தில் என்னைப் பயன்படுத்த வைத்த பிரியன் சார், ராஜன் சாருக்கு நன்றி. தற்போது மெல்லிசைப் பாடல் அதிகம் வருவதில்லை. இப்படம் அந்த ஏக்கத்தைப் போக்கும். இப்படத்தை அனைவரும் ரசிப்பீர்கள்” என்றார்.

அறிமுக பாடலாசிரியர் சுப்பா ராவ் பேசுகையில், “தமிழ்த்திரைப்பா கூடத்தில் பாடல் எழுதப் பயிற்சி பெற்றேன். உலகத்திலேயே பாடல் எழுதப் பயிற்சி தருவது இவர் மட்டும் தான். அரணம் எடுத்த போது எனக்கு வாய்ப்புத் தந்தார். அரணம் படத்தை எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் ஹாரர் காமெடி திரில்லர் சேர்த்து அருமையாக எடுத்துள்ளார். பாடல் எல்லாம் அருமையாக வந்துள்ளது. அவரிடம் 250 க்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் மாணவர்களாக உள்ளனர். அவருக்கு மாணவர்களை வளர்த்துவிட வேண்டும் என்பது தான் ஆசை. இப்படம் இரண்டாவது ஷெட்யூல் எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. பல இரவுகள் அவர் தூங்கவில்லை. இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. . உங்களைக் கண்டிப்பாக இந்தப்படம் திருப்தி செய்யும்” என்றார்.

நாயகி வர்ஷா பேசுகையில், “முதலில் பிரியன் சாருக்கு நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பைத் தந்தார். முதல் படம் நடிக்கும் போது நாயகியுடன் யாராவது கூட வருவார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் தனியாக வந்து தான் நடித்தேன். படத்தில் பணியாற்றிய எல்லோரும் என்னை அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். பிரியன் சார் ஒவ்வொன்றையும் சொல்லித்தந்தார். பிரியன் சார் தன் கூட இருக்கும் அனைவரும் வளர வேண்டும் என்று நினைப்பவர். தமிழைக் கொண்டாடுபவர்களுக்கு இப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. படத்தில் நானே டப்பிங் பேசியுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.

தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பாளர் ராஜாராம் பேசுகையில், “தமிழ்த்திரைப்பா கூடத்தில் பயின்றவர்களில் நான் தான் வயது மூத்தவன். பிரியன் அவர்கள் எப்போதும் யாரிடமும் கோபமாகப் பேச மாட்டார். அவரிடம் ஏன் பாடலாசிரியர்களை உருவாக்குகிறீர்கள் என்று கேட்டேன். சென்னைக்கு பாடலாசிரியர் ஆகும் கனவில் தான் வந்தேன். தமிழ் மொழி தான் எனக்கு வாழ்வு தந்தது. அதற்கான கைமாறு தான் இது என்றார். தமிழ் மொழி மீது தீராத அன்பு கொண்டவர். இந்தப்படம் க்ரவுட் ஃபண்டிங் முறையில் தான் உருவானது. முதலில் இப்படத்தில் வேறொருவர் இயக்கி வேறொருவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தது. மாணவர்கள் சொல்லித்தான் பிரியன் சார் இறுதியில் இயக்கி நடித்தார். இந்தப்படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர் பெரிய நடிகராக வருவார். படத்தை மிகப்பெரிய உழைப்பில் உருவாக்கியுள்ளார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

இயக்குநர் நடிகர் பாடலாசிரியர் பிரியன் பேசகையில், “அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம். 20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?. ஒரு கலையை அந்தத்துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். அரணம் நிறையக் கற்றுத் தந்துள்ளது. தன்னுடைய படத்தின் விழாவிற்கே வராமல் இருக்கிறார்கள் நாயகிகள். ஆனால் வர்ஷா இந்தப்படத்தில் ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இப்போது வரை படத்திற்காக பணியாற்றிக் கொண்டுள்ளார், அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நௌஷத் என்ன சொன்னாலும் உடனே செய்துவிடுவார், அவருக்கு நன்றி. பிகே சம்பளமே வேண்டாம்இ இந்தக்கதைக்காக நான் வேலை செய்கிறேன் என்று வந்து எடிட் செய்தார், அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் உடல்நிலை காரணமாக வரமுடியவில்லை.

நல்ல பாடல்கள் தந்துள்ளார், அவருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் தங்கள் படமாக நினைத்துத் தான் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர்கள், நான் பாடமெடுத்தவர்கள் இப்போது மேடையில் இருப்பது பெருமையாக உள்ளது. என்னை நம்பி இப்படத்தைத் தயாரித்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் முயற்சியில் 250 பாடலாசிரியர் உருவாகியிருப்பதே பெருமை தான். நீங்கள் எதிரிகளை உருவாக்குகிறீர்கள் என்றார்கள் சிலர். ஆனால், எனக்குப் பெருமைதான். ஏனெனில் தோற்றாலும் ஜெயித்தாலும் அது நான் என்பது தான் என் பெருமை. படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லைஇ கார்ப்பரேட் கையில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னப் படங்களை எடுத்து விடுகிறார்கள்.

ஆயிரம் தியேட்டரிலும் ஓரே படம் தான் ஓடுகிறது. நான் இப்படிப்பட்ட இடத்தில் வந்து தோற்றாலும் நான் நிமிர்ந்து நிற்பேன், நான் இருக்கிறேன் என்பதைப் பதிவு செய்வேன். இப்போது எடுக்கும் 300 கோடி 400 கோடி படங்கள் எல்லாம் குப்பையாக இருக்கிறது. படம் என்றhல் அடி, வெட்டு, இரத்தம் மட்டும் தானா? கலைஞனுக்கு அறம் வேண்டாமா? காசு மட்டும் இருந்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? வெளிப்படங்கள் வருவதைக் கூட பொறுத்தக்கலாம். 10, 20 வருடம் ஆன முத்து, ஆளவந்தான் எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம். யூடியூபில் ரஜினி ஜப்பான் மொழி பேசும் முத்து படமே இருக்கிறது. எதற்கு மீண்டும் மீண்டும் இப்படி சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப்படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். ஒரு தரமான படைப்பை நாங்கள் தந்துள்ளோம். இது ஒரு எழுத்தாளனின் படைப்பு இந்தப்படத்தின் முதல் பாதியைப் பார்த்து இரண்டாம் பாதியை கணிக்கவே முடியாது. முழுப்படமும் உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *