செம ட்விஸ்ட்.. அமெரிக்காவில் கோலி.. பின்னணியில் ஐசிசி? டி20 உலகக்கோப்பையில் மாஸ் திட்டம்

இந்திய டி20 அணியில் கடந்த ஓராண்டு காலமாக மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.

ஆனால், தற்போது 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் அவர்கள் இருவரும் நேரடியாக இடம் பெறுவார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளன.

ரோஹித் சர்மா கூட ஒருநாள் போட்டி உலகக்கோப்பை முடிந்த பின் பிசிசிஐ-இடம் தான் டி20 உலகக்கோப்பையில் ஆட விரும்புவதாக கூறி விட்டார். ஆனால், இத்தனை நாள் இல்லாமல் திடீரென ஏன் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடும் முடிவை எடுக்க வேண்டும்?

இதன் பின்னணியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமற்ற முறையில் விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் ஆடினால் அது சில பலன்களை பெற்றுத் தரும் என முக்கிய பிசிசிஐ அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

2024 டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதன் முக்கிய நோக்கமே அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலமாக்குவது தான். அதன் மூலம் வருங்காலத்தில் பணக்கார நாடான அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் வருவாய் ஈட்ட முடியும். அதை செய்ய கிரிக்கெட்டின் முகமாக ஒருவர் தேவை. இன்றைய தேதியில் விராட் கோலி அதற்கு பொருத்தமான நபர்.

ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற கால்பந்து பிரபலங்களுக்கு இணையாக சமூக ஊடகங்களில் விராட் கோலிக்கு ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவரை அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வைத்தால் அதன் மூலம் அதிக ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வரலாம். அமெரிக்க ஊடகங்களும் விராட் கோலி யார் என தேடும் போது அவரது சாதனைகளை பார்த்து பிரமித்து பெரிதாக எழுதக் கூடும்.

இந்த காரணங்களால் ஐசிசி விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் ஆடுவதை விரும்புவதாக கூறப்படுகிறது. எனினும், விராட் கோலி மீண்டும் டி20 அணியில் இடம் பெற இது மட்டுமே காரணமாக இருக்காது. அவருக்கு தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *