டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடை பெற்றார் டேவிட் வார்னர்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இன்று வெற்றியுடன் விடைபெற்றார்.
பாகிஸ்தான் அணியுடனான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்று வெற்றி பெற்றது. இதனுடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை டேவிட் வார்னர் முடித்து கொண்டார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி மேட்ச் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர்கள் முதல் இன்னிங்சில் 313 ரன்கள் சேர்த்தனர்.இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 299 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் ஆமிர் ஜமால் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்சில் 14 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் நேர்த்தியான பந்து வீச்சுக்கு முன்னால் பாகிஸ்தான் அணி வீரர்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர் 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 25.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 57 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 62 ரன்களும் எடுத்தனர். முன்னதாக இந்த கிரிக்கெட் தொடருடன் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படி வெற்றியுடன் டேவிட் வார்னர் தனது டெஸ்ட் பயணத்தை முடித்துள்ளார்.
போட்டி முடிந்த போது பாகிஸ்தான் அணி வீரர்கள் கையெழுத்திட்டு ஜெர்சி ஒன்றை டேவிட் வார்னருக்கு வழஙகினர். சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்குள் வரவழைக்கப்பட்டு டேவிட் வார்னருக்கு ஃபேர்வெல் நடத்தப்பட்டது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.