CM Stalin : அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல்.. ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
மலையாள இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு மகனாக 1967 ஜனவரி 6 ல் சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பதினோராம் வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தார்.
எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதனிடமும் பணி புரிந்தார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றார். நிறைய விளம்பர படங்களுக்கு இசை அமைத்தார்.1992 ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “ரோஜா” திரைப்படம் இவரின் இசையில் முதல் படமாக வெளியானது.
முதல் படத்திலேயே முந்தைய காலகட்டத்தின் இசையை போல இல்லாமல் புது மாதிரியாக ரசிகர்களை உணர வைத்தார். ரோஜா வின் பாடல்களும் பின்னனி இசை கோர்ப்பும் ரசிகர்களை புதிதாக கொண்டாட வைத்தது. எல்லோரது கவனமும் இவர் மேல் விழுந்தது.
ரோஜாவில் ஆரம்பித்த பயணம் புயல் வேகமாக இந்திய எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவியது. இசைக்கு ஏது மொழி என்பது போல தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று தனது எல்லையை விரித்தார்.
“சின்ன சின்ன ஆசை” என்ற பாடலோடு ரோஜா வில் ஆரம்பித்த பயணம் 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார். இன்று இவரின் பிறந்தநாள். இதனையொட்டி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். pic.twitter.com/x4p3qFaz7Z
— M.K.Stalin (@mkstalin) January 6, 2024
அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , துள்ளல் இசையாலும் – தூய்மையான தமிழுணர்வாலும் நம்மை ஆட்கொண்டிருக்கும் இசைப்புயல் @arrahman சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல்நலத்தோடு இன்னும் பற்பல ஆண்டுகள் அவரது இசைப்பயணம் தொடரட்டும் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.