பா.ஜ.,வில் இணைந்த பாதிரியாரின் திருச்சபை பதவிகள் பறிப்பு
திருவனந்தபுரம், கேரளாவில், 50 குடும்பங்களுடன் பா.ஜ.,வில் இணைந்த பாதிரியார் சைஜூ குரியனின் திருச்சபை பதவி மற்றும் பொறுப்புகள் பறிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைகேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நிலக்கல் பத்ராசனம் சர்ச்சின் மறைமாவட்ட செயலராக, பாதிரியார் சைஜூ குரியன் பணியாற்றி வந்தார். அதே நேரத்தில், அங்கு நடக்கும் பள்ளியின் துணைத் தலைவராகவும் அவர் உள்ளார். கடந்த 31ம் தேதி பாதிரியார் சைஜூ குரியன் உட்பட, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மத்திய அமைச்சர் முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இதையடுத்து, சர்ச் பதவிகளில் இருந்து குரியனை, பத்ராசனம் தேவாலய நிர்வாகக் குழு நீக்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சைஜூ குரியன் பா.ஜ.,வில் சேர்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ‘அது முடியும் வரை, சர்ச்சில் அவர் பணியாற்றி வந்த பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்.இது, மறைமாவட்ட சபையால் எடுக்கப்பட்ட முடிவு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.இந்த விவகாரத்தில் குரியன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மலங்காரா திருச்சபை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைபா.ஜ.,வில் சேர்ந்ததாலேயே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் கேரள கிறிஸ்துவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.