ஐபிஎல் நல்லாருக்கு.. ஆனா இந்தியா கசக்குதா? இங்கிலாந்து அணியை சாடிய ஆகாஷ் சோப்ரா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதன் வாயிலாக 13 வருடங்கள் கழித்து அந்நாட்டில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது.

அதை முடித்துக் கொண்டு மீண்டும் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா கசக்குதா:

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி விளையாடும் இங்கிலாந்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே சுழலுக்கு சாதகமான மைதானங்களில் வலுவான இந்தியாவுக்கு அந்த அணி பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் அத்தொடரில் பங்கேற்பதற்காக விரைவில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணியினர் கூடவே ஒரு பிரத்தியேக உயர்தர சமையல்காரரை (செஃப்) அழைத்து வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சமையல்காரர்கள் அவர்களுடைய ஸ்டைலில் சமைத்தால் தங்களுடைய உடலுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று இங்கிலாந்து அணியினர் கருதுகிறார்கள்.

எனவே 5 போட்டிகள் கொண்ட மெகா தொடர் நடைபெறும் போது தங்களுடைய வீரர்களுக்கு எந்த நோயும் வந்து விடக்கூடாது என்று கருதும் இங்கிலாந்து அணி நிர்வாகம் அதை தவிர்க்க தங்கள் நாட்டிலிருந்து பிரத்தியேக சமையல்காரரை அழைத்து வரவுள்ளதாக டெலிகிராப் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அதைப் பார்த்து அதிருப்தியடைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் இங்கிலாந்தை சாடியுள்ளது பின்வருமாறு.

“நல்ல ஐடியா. இந்த சமயத்தில் பெரும்பாலான இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதும் தங்களுக்கென்று பிரத்யேக சமையல்காரர் இந்தியாவுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் போது இந்திய சமையல்காரர்கள் உண்ணும் உணவை சாப்பிட்டு இங்கிலாந்து வீரர்கள் இனிமையாக ஆரோக்கியத்துடன் விளையாடி செல்லும் நிலையில் நாட்டுக்காக இந்தியாவுக்கு விளையாட வரும் போது மட்டும் கசக்கிறார்களா என்று மறைமுகமாக அவர் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *