இந்திய வேளாண் விளைபொருட்களை பல நாடுகள் வாங்க மறுப்பதற்கு நச்சுத்தன்மை காரணமா?
மதுரை: நாட்டில் உணவுப்பொருள் உற்பத்தியில் மேற் கொள்ள வேண்டிய புதிய நடைமுறைகள், நச்சு இல்லாத விளைபொருட்களை விளைவிப்பதில் விவசாயிகளுக்கும், அவற்றை சந்தையில் விற்பனை செய்யும் உணவுப் பொருள் விற்பனை வியாபாரிகளுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இன்றைக்குப் பெரும் சவாலாக உள்ளன.
விவசாயிகள் விளைபொருட்களைச் சாகுபடி செய்யும்போது உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு அடிப்படை விழிப்புணர்வுகூட இல்லை.
காரணம், வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதில்லை. மத்திய, மாநில வேளாண் அதிகாரிகள் அதிகளவில் பணியில் இருந்தும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்து நமது அண்டை மாநிலமான கேரளாவுக்கு அனுப்பியபோது காய்கறிகள், மசாலா பொருட்களில் அதிக நச்சுகள் இருப்பதாகக் கூறி அம்மாநில அரசு அவற்றை திருப்பி அனுப்பியது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் அதிக நச்சு இருப்பதாக நம் அண்டை மாநிலமே கூறும்போது அதிக தரக் கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடிக்கும் வெளிநாடுகள், ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் உணவுப்பொருட்களை வாங்க மறுத்துவிடுகின்றன. இதனால், வேளாண் உணவுப்பொருட்கள் பெருமளவு ஏற்றுமதி ஆகவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வியாபாரிகளும் விற்பனை பாதிப்பால் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.