ஸ்ரீவில்லிபுத்தூர் மார்கழி நீராட்டு உத்ஸவம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி நீராட்டு உத்ஸவம், மார்கழி மாதத்தின் 23ம் நாள் இரவு தொடங்கும். தை மாத பிறப்பு வரை இவ்விழா கொண்டாடப்படும்.
இதையொட்டி நடைபெறும் எண்ணெய் காப்பு உத்ஸவம் மிகவும் விசேஷமானது.
இந்த உத்ஸவத்தின் எட்டு நாட்களும் திருக்குளக் கரையில் உள்ள நீராட்டு மண்டபத்தில், மாலை மூன்று மணிக்கு ஆண்டாளுக்கு, எண்ணெய் காப்பு உத்ஸவம் நடைபெறும். நெற்றிச்சுட்டி, தலைநாகர், தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன், சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
பிறகு தலையிலுள்ள ஆபரணங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தலையைக் கோதி, சிக்கு எடுத்து, சுகந்த தைலத்தை சாத்துவர். இவ்வாறு மூன்று முறை எண்ணெய் காப்பு சாற்றி, சவுரியை பெரிய கொண்டையாக முடிந்து, மலர் மாலைகளை சூட்டுவர். தொடர்ந்து பக்தி உலர்த்துதல் வைபவம் நடைபெறும்.
அடுத்து, நீராட்டு வைபவம். அப்போது சங்க நிதி, பதும நிதி மற்றும் 1000 துளைகள் கொண்ட வெள்ளி தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளை அபிஷேகம் செய்வர். முடிவில் தங்கக் குடத்தால் அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்வித்து ஆண்டாளை தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த வைபவத்தில் ஆண்டாளை தரிசிக்க திருமணம் தடைபடுவோர், காரிய அனுகூலம் மற்றும் பிள்ளைப் பேறு வேண்டுவோரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.