இளையராஜா, பா.ரஞ்சித் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?
நேற்று இயக்குநர் பா.ரஞ்சித், இளையராஜாவை நேரில் சென்று சந்தித்தார். இருவரும் அரைமணி நேரம் உரையாடினர். ரஞ்சித் இளையராஜாவை சந்திப்பது இதுவே முதன்முறை என்பதால் இந்த சந்திப்பு திரைத்துறை வட்டாரத்தில் பேசுபொருளானது.
இளையராஜா மீது பெருமதிப்பு வைத்திருப்பவர் ரஞ்சித். அவர் இயக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை எனினும், தான் சினிமாவுக்கு வந்ததற்கு இளையராஜாவும், அவரது பாடல்களும் ஒரு காரணம் என்பதை பலமுறை ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தை முடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். 2014 ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தங்கலானை அடுத்து வேட்டுவம் என்ற படத்தை ரஞ்சித் இயக்குகிறார். பிரான்சில் நடந்த 75 வது கான் சர்வதேச திரைப்பட விழாவில் இதன் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. மும்பையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் வேட்டுவம் படத்தை தயாரிக்கிறது. மதுரை பின்னணியில் அமைந்த கேங்ஸ்டர் படமாக இது இருக்கும் என்கிறார்கள்.
விரைவில் வேட்டுவம் படத்தை ரஞ்சித் தொடங்கயிருக்கிறார். அது குறித்துப் பேசவே அவர் இளையராஜாவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையானால் ரஞ்சித் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் முதல் படமாக வேட்டுவம் இருக்கும்.
இந்த சந்திப்பின் போது பாபாசாகேபின் காதல் கடிதம் என்ற புத்தகத்தை ரஞ்சித் இளையராஜாவுக்கு பரிசளித்தார். மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.