இன்று முதல் திருவண்ணாமலை கோவில் விஐபி தரிசனம் ரத்து..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் மேல்மருவத்தூர் மற்றும் ஐயப்பன் கோயில் சீசன் தற்போது நடைபெற்று வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கோயிலில் கூட்டம் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேரம் மிகவும் அதிகமாகிறது. நீண்ட தூரத்திற்கு காத்திருந்து பக்தர்கள் சுவாமி, அம்பாளை வழிபட வேண்டி உள்ளது. இந்தநிலையில் கோயிலுக்கு வரும் விஐபிகள் மற்றும் விவிஐபிக்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்க நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் விஐபி, விவிஐபி சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.