வெளிநாடு சென்ற கனடா பிரதமரின் விமானத்தில் மீண்டும் கோளாறு
நான்கு மாதங்களுக்கு முன் இந்தியா சென்ற கனடா பிரதமரின் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அவர் 36 மணி நேரம் இந்தியாவிலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
தற்போது, மீண்டும் அவரது விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அவரது விமானத்தை சரி செய்ய இரண்டாவதாக ஒரு விமானத்தை அனுப்பும் நிலை கனடா அரசுக்கு ஏற்பட்டது.
விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருந்த கனடா பிரதமர்
டிசம்பர் 26ஆம் திகதி, கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார்.
இம்மாதம், அதாவது ஜனவரி 4ஆம் திகதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதையொட்டி, 2ஆம் திகதி, அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் ஒரு பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவிலிருந்து பறந்த இரண்டாவது விமானம்
பிரதமரின் விமானத்தில் பழுது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை சரிசெய்வதற்கான குழுவினருடன், 3ஆம் திகதி கனடாவிலிருந்து மற்றொரு விமானம் ஜமைக்காவுக்குச் சென்றுள்ளது.
4ஆம் திகதி, கனடா பிரதமரின் விமானமும், அதை பழுதுபார்க்கச் சென்ற இரண்டாவது விமானமும் கனடா திரும்பியுள்ளன.
ஏற்கனவே, செப்டம்பரில், G20 மாநாட்டுக்காக ட்ரூடோ இந்தியா சென்றபோதும் அவரது விமானத்தில் பழுது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.