சபரிமலை: “ஒருவருக்கு 2 டின் அரவணை மட்டுமே!” – வாக்குவாதத்தில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்கள்

பரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலபூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்று இரவு நடை சார்த்தப்பட்டது.

இதையடுத்து மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 30-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது.

வரும் 15-ம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி சபரிமலை நடை சார்த்தப்படும். மண்டலகால பூஜைகளின்போது பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டதுடன், ஆன்லைன் முன்பதிவுகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் அரவணை பிரசாதம் விநியோகிப்பதில் கடந்த ஆறு நாள்களாகக் கட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு பக்தருக்கு இரண்டு டின் அரவணை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

அரவணை பிரசாதம்

சபரிமலையில் அரவணை பிரசாதம் விநியோகம் செய்வதற்காக கடந்த மாதம் 26-ம் தேதி இரண்டு புதிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 30 லட்சம் டின் அரவணை தேவை என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுதான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட பிறகுதான் அரவணைக்கான டின்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது. அட்டையில் தயாரிக்கப்படும் அரவணை டின்களை ஒட்டி வைத்த பிறகு காய்வதற்குக் காலதாமதம் ஆவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பதினெட்டாம்படி முன் குவிந்துள்ள பக்தர்கள்

முப்பது லட்சம் டின் அரவணை தேவைப்படும் நிலையில் நேற்று ஒரு லட்சம் டின்கள்தான் தயாராகி வந்தன. கடந்த ஆறு நாள்களாக அரவணைக்கான கண்டெய்னர்களுக்குப் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அரவணை வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முதலில் ஒரு பக்தருக்கு 10 அரவணை வழங்கப்பட்டு வந்தது. அப்படியும் சமாளிக்க முடியாத நிலையில் கடந்த திங்கள்கிழமை ஒரு பக்தருக்கு வழங்கப்பட்ட அரவணையின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒரு பக்தருக்கு 2 அரவணைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *