போருக்கு பிறகு காசாவை ஆட்சி செய்யப் போவது யார்? இஸ்ரேலிய அமைச்சர் தகவல்
காசாவில் போருக்கு பிறகான நிர்வாக திட்டம் குறித்து இஸ்ரேலிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் படையினரை முற்றிலுமாக தீர்த்துக் கட்டும் வரை தாக்குதல் தொடரும் என தெரிவித்து இஸ்ரேல் போர் நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை காசாவில் நடைபெற்ற போர் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கிட்டத்தட்ட 23,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நிர்வாக திட்டம்
இந்நிலையில் போருக்கு பிறகு அமைக்கப்பட இருக்கும் நிர்வாக திட்டம் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் போர் நிறைவடைந்த பிறகு காசா பகுதியை இஸ்ரேல் அல்லது ஹமாஸ் ஆட்சி செய்ய போவது இல்லை.
அதே சமயம் ஹமாஸ் அமைப்பால் கட்டுப்படுத்த முடியாத வகையில், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் வழங்காத வகையில் உள்ளூர் அமைப்பின் மூலம் காசா நிர்வகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் வாழும் மக்கள் பாலஸ்தீனியர்கள், எனவே நிர்வாகத்தில் வைக்கப்படும் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக எந்தவொரு விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் அமைப்பானது நிர்வாகத்தில் அமர்த்தப்படும்.
மேலும் போர் நிறைவடைந்த பிறகு காசாவில் இஸ்ரேலியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எனவும் இஸ்ரேலிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.