நீலகிரியின் சபரிமலை: புலி வாகனத்தில் தர்ம சாஸ்தா; கோலாகலமாக நடைபெற்ற 60-ம் ஆண்டு விளக்கு பூஜை!
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் அமைந்திருக்கிறது. நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் இந்த ஆலயத்தில் ஐயப்பன் விளக்கு பூஜை 60 ஆண்டுகளாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐயப்ப விளக்கு
நடப்பு ஆண்டுக்கான ஐயப்ப விளக்கு பூஜை கணபதி வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, குந்தாபாலம் சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் ஐயப்பன் திருவீதி உலா மற்றும் விளக்கு ஊர்வலம் தொடங்கியது. இதில் சென்டைமேளங்கள் மற்றும் பேண்டு வாத்தியங்கள் முழங்க புலி வாகனத்தில் ஐயப்பன் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் விளக்குகளைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
ஐயப்ப விளக்கு
ஒளி வெள்ளத்தில் பக்தர்கள் படை சூழ குந்தா கடைவீதி, மின்வாரிய மேல்முகாம், காவல்நிலையம், மஞ்சூர் பஜார் வழியாக மஞ்சூர் ஐயப்பன் பவனி நடைபெற்றது. ஆலயத்தை அடைந்த ஐயப்பனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 18 படிகளுக்கும் பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 60வது ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.