அதிர்ச்சி… தமிழக பக்தர்கள் மீது சபரிமலையில் கொடூர தாக்குதல்… கேரள போலீசார் அடாவடி!
ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு 18ம் படியேறி சென்று ஐயப்பனை தரிசிக்கும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில், சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களை 18ம் படி அருகே காவலுக்கு இருக்கும் கேரள போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலையில் இந்த வருடம், நடை திறக்கப்பட்ட முதலே தமிழக பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், தமிழக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கேரள பக்தர்களை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மலையேற அனுமதித்ததாக புகார்கள் வெளியானது. தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களை அம்மாநில போலீசார் சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைப்பதாகவும் புகார்கள் வந்தன.
அங்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித முயற்சிகளையும் செய்யாததால் கூட்டத்தில் சிக்கி திணறி வருகிறார்கள். இதனால் பலரும் சன்னிதானம் செல்லாமலே திரும்பி வருகின்றனர். இவ்வளவு சிரமங்களுக்கிடையே சன்னிதானம் செல்லும் பக்தர்களை கேரள போலீஸார் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தஞ்சாவூரை சேர்ந்த தயானந்த் (24) என்ற பக்தர் உள்பட சிலர் 18ம்படி அருகே தரிசனத்துக்காக நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீஸின் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸார் தயானந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் வந்தவர்கள் அதை தட்டிக் கேட்டனர். அதனால் அவர்களையும் போலீஸார் தாக்கியுள்ளனர்.
போலீஸ் தாக்கியதில் தயானந்தின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தயானந்த் சன்னிதானம் போலீஸில் புகார் அளித்துள்ளார். தமிழக பக்தர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஐயப்ப பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.