IND vs ENG : இந்தியர்கள் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம் அதனால்.. ஓவர் ஸீன் போடும் இங்கிலாந்து
மும்பை : இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வர உள்ள நிலையில் அதற்கு முன்பு இந்தியாவில் எதுவுமே சரியாக இருக்காது என்ற மனநிலையில் அந்த அணி சில காரியங்களை செய்து வருகிறது. முதலில் பயிற்சி செய்ய இந்தியா வர மறுத்த இங்கிலாந்து அணி, இந்திய பிட்ச்களில் ஆடும் முன் அதற்கு சம்பந்தமே இல்லாத துபாயில் சென்று பயிற்சி செய்ய உள்ளதாக கூறப்பட்டது.
சரி, அது போகட்டும் என பார்த்தால் தற்போது இந்தியா வரும் போது, இங்கிலாந்து அணி ஒரு சமையல்காரரையும் உடன் அழைத்து வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் சமையல் நிபுணர்கள் சமைக்கும் உணவை உண்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என இந்த முன்னெச்சரிக்கை என கூறப்படுகிறது. இது போன்ற செயல்களால் இந்திய ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணியை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25 அன்று துவங்க உள்ளது. பொதுவாக நீண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் முன் எந்த ஒரு வெளிநாட்டு அணியும், டெஸ்ட் தொடர் நடைபெறும் நாட்டிற்கு சில வாரங்கள் முன்கூட்டியே சென்று இரண்டு, மூன்று பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்பார்கள். அதன் மூலம், அந்த நாட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவில் நல்ல மைதானங்கள், பிட்ச்கள், நெட் பவுலர்கள் என பயிற்சிக்கான எந்த வசதியும் சரியாக கிடைக்காது என முடிவு செய்த இங்கிலாந்து அணி துபாயில் பயிற்சி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கொஞ்சம் அதிகப்படியான விஷயமாக இருந்தது, எனினும், ஒரு அணி பயிற்சி செய்வது என்பது அதன் விருப்பம் என இந்தியாவில் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.