Happy Teeth: பல்லில் பிரச்னை… வேறு பகுதியில் வலியை உணர்வது ஏன்?
பல் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி, பல் மருத்துவம் என்றாலே செலவு பிடிப்பதுதானா, பல்லில் பிரச்னை இருக்கும்போது வேறு பகுதியில் உணர்வு ஏன் உள்ளிட்ட அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா
பல் சிகிச்சை என்றாலே செலவுதானா?
பல் சிகிச்சை என்றாலே அதிக செலவாகும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை அலட்சியம்தான் அதித செலவுக்கு இட்டுச் செல்கிறது. பல் சார்ந்த பிரச்னைகள் மட்டுமல்ல உடலில் எந்தப் பிரச்னை என்றாலும் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைவதும் சீக்கிரமாக நடக்கும், அதிக செலவும் ஏற்படாது.
பல் பிரச்னைகளைப் பொறுத்தவரை பலருக்கும் சிகிச்சை பற்றிய பயம் இயல்பாகவே இருக்கிறது. அதுதவிர, அதிக செலவாகுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக சிகிச்சையை தங்களால் முடிந்த அளவுக்குத் தள்ளிப் போடுகின்றனர். தங்களால் முடிந்தவரை சுய மருத்துவம் செய்துகொள்கின்றனர். வலி அதிகமாகி சமாளிக்க முடியாத நிலையில் பிரச்னைகள் தீவிரமாகும்போதுதான் மருத்துவரை அணுகுகின்றனர்.
ஒருவருக்கு ஈறு பிரச்னை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அறிகுறி தென்பட்டதும் ஆரம்பத்திலேயே பல் மருத்துவரை அணுகினால், சாதாரண சுத்தப்படுத்தல் முறையிலேயே அதற்குத் தீர்வு கண்டுவிட முடியும். பிரச்னையை அலட்சியம் செய்தால் ஈறு பிரச்னைகள் தீவிரமாகி பல் ஆடத் தொடங்கிவிடும். அந்த நிலையில் மருத்துவரிடம் வந்தால் பல் முழுவதுமாக சேதமாகியிருக்கும். அதை நீக்குவதைத் தவிர வேறு வழியே இல்லை.
பல்லை நீக்கிவிட்டால், நீக்கிய இடத்தில் மாற்றுப் பல் பொருத்த வேண்டியிருக்கும். அதற்கான தொடர் சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். அந்தச் சிகிச்சைகளுக்கு செலவும் அதிகமாகத்தான் இருக்கும். ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகியிருந்தால் வெறும் சுத்தப்படுத்துவதிலேயே தீர்வு கண்டிருக்க முடியும்.