தவறான ஊசியால் உயிரிழந்த இளைஞர்..! மருத்துவருக்கு கிடைத்த தண்டனை என்ன..?
“டாக்டர்” – அம்மா, அப்பாவுக்குப் பிறகு நாம் மதிக்கும் நம்பும் ஒரு நபர். அவர் என்ன மாத்திரை கொடுத்தாலும் யோசிக்காமல் உட்கொள்ளுவோம்…
என்ன ஊசி போட்டாலும் கேள்வி கேட்க மாட்டோம். இந்த மாதிரியான டாக்டர்கள் சில நேரங்களில் நோயாளிகளுக்கு எமன் ஆகிவிடுகிறார்கள்.
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவருக்கு வயது 31. 2017-ம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக சரவணக்குமார் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நந்திவர்மன், “இது சாதாரண வலி” என்று கூறி ஊசி போட்டுள்ளார். அதன்பிறகு சரவணக்குமாரின் உடல்நிலை மிகவும் மோசமடைய அவரின் உறவினர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த டாக்டர் மறுத்துள்ளார். இது நடந்த சிறிது நேரத்திலேயே சரவணக்குமார் இறந்திருக்கிறார்.
இதையடுத்து அவரின் உறவினர்கள் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சரவணக்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரின் இறப்புக்கு தவறான ஊசியே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு சென்னை பெருநகர 15-வது ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, “டாக்டர் நந்திவர்மன் கவனக்குறைவுடன் செயல்பட்டு இறப்பு ஏற்படுத்தியதால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை” என்று தீர்ப்பளித்துள்ளார்.