தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் டாப் 5 முதலீடு..!!
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில், குவால்காம் இன்க் சென்னையில் தங்களது அலுவலகத்தில் விரிவாக்கமாகப் புதிய டிசைன் சென்டரை அமைக்க உள்ளது.
இந்த டிசைன் சென்டருக்காகக் குவால்கம் நிறுவனம் சுமார் ரூ.177.27 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சென்னை குவால்கம் டிசைன் சென்டர் வயர்லெஸ் கன்னெக்ட்டிவிட்டி சேவைகளுக்கான தீர்வுகளில் நிபுணத்துவம் பெறும், இது வைஃபை தொழில்நுட்பத்தில் புதுமைகளைக் கொண்டுவரக் கவனம் செலுத்தும். கூடுதலாக, இது 5G செல்லுலார் தொழில்நுட்பத்தில் Qualcomm இன் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்குச் சென்னை டிசைன் சென்டர் முக்கிய பங்களிக்கும். இந்தப் புதிய டிசைன் சென்டரில் சுமார் 1600 திறம் வாய்ந்த நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சென்னையின் துடிப்பான மற்றும் திறன்மிக்க ஊழியர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 இன் போது சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk-இன் A.P. Moller – மற்றும் தமிழ்நாடு அரசு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. தமிழ்நாடு அரசுடன் 25 வருடமான இணைந்து பணியாற்றி வரும் Maersk மாநிலத்தில் இரு முனையத்தில் பணியாற்றி வரும் வேளையில் Maersk இப்போது லாஜிஸ்டிக்ஸ் மையங்களை உருவாக்க நில மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய உள்ளது. இந்த லாஜிஸ்டிக்ஸ் மையங்கள் வாடிக்கையாளர்களின் விநியோகச் சங்கிலி சேவைகளைப் பெரிய அளவில் மேம்படுத்தும் எனக் கூறியுள்ளது. குவால்கம், Maersk உடன் இணைந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழகத்தில் ₹12,082 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், பெகாட்ரான் ₹1,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், டிவிஎஸ் நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ₹5000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த அறிவிப்பு வெளியானது.