|

Bangladesh Poll: இந்தியாதான் எங்களுக்கு ஆதரவளித்தது.. நம்பகமான நட்பு.. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நெகிழ்ச்சி

இந்தியா தங்களுக்கு நம்பகமான நண்பர் என, தேர்தல் நடைபெறும், வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேச நாடாளுமன்ற பொதுத்தேர்தல்:

வன்முறை மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் வங்கதேசத்திற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி என்பதே இன்றி நடைபெறும் இந்த தேர்தலில், ஷேக் ஹசினா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றும் மீண்டும் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்தியாவை பாராட்டி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

”இந்தியா எங்களது நம்பகமான நண்பன்”

இந்தியா தொடர்பாக பேசியுள்ள ஷேக் ஹசீனா, “இந்தியா போன்ற ஒரு அண்டை நாட்டைப் பெற்று இருப்பது வங்கதேசத்தின் அதிர்ஷ்டம். இந்தியா எங்களது நம்பகமான நண்பர். விடுதலை போராட்டத்தின் போது இந்தியா தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. 1975 க்குப் பிறகு, நாங்கள் எங்கள் முழு குடும்பத்தையும் இழந்தபோது, ​​அவர்கள் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இந்திய மக்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா – வங்கதேச உறவு

1971ம் ஆண்டு பாகிஸ்தான் வங்கதேசத்தை ஆக்கிரமித்தபோது, அதனை விடுவிப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றியதில் இருந்தே இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் வலிமையானதாக உள்ளது. இந்தியாவும், வங்கதேசமும் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளால் குறிக்கப்பட்ட நெருக்கமான மற்றும் பன்முக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவானது சமீப காலங்களில் மேலும் வலுப்பெற்றுள்ளது. ஹசீனாவும் பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி நடத்திய சந்திப்புகள் மற்றும் இணைப்புத் திட்டங்கள் மூலம், வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் எல்லை மேலாண்மை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது.

வங்கதேசம் ஒரு காலத்தில் வறுமையில் வாடி வந்த நிலையில், விதிவிலக்கான பொருளாதார வளர்ச்சிக்காக ஹசீனாவை நிபுணர்கள் பாராட்டுகின்றனர். அதேநேரம், அவரது அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது இரக்கமற்ற ஒடுக்குமுறையை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இந்த சூழலில் தற்போதைய தேர்தலிலும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றால், அவர் 4 முறையாக பிரதமராவார். அவரது கட்சிக்கு ஒட்டுமொத்தமாக இது நான்காவது வெற்றியாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *