நள்ளிரவில் நடுரோட்டில் தவித்த அய்யப்ப பக்தர்கள்.. இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. செம
பெங்களூர்: கர்நாடகாவில் மழை நேரத்தில் நடுரோட்டில் தவித்த அய்யப்ப சாமி பக்தர்களை இஸ்லாமியர்கள் மசூதியில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் மதம் சார்ந்த பிரச்சனைகளை சிலர் கிளப்பி வருகின்றனர். இது போராட்டம், வன்முறையாகவும் மாறியுள்ளது. இதனால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்படிப்படி பிரச்சனைக்கு நடுவேயும் கூட ஆங்காங்கே மதங்களை கடந்து சகோதரத்துவ பாசம் என்பது தளைத்தோங்கி வருகிறது.
இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என அனைவரும் மதங்களை கடந்து நட்பு பாராட்டி வருகின்றனர். குறிப்பாக வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மதங்களை கடந்து மக்கள் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்தனர். குறிப்பாக சென்னை வெள்ளத்தின்போது மசூதிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற சகோதரத்துவ மனப்பான்மையுடன் வேற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மக்கள் உதவிகளை செய்து வருகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் தான் கர்நாடகா மாநிலம் குடகு மாவடத்தில் நடந்துள்ளது. அதாவது நள்ளிரவில் நடுரோட்டில் தவித்த அய்யப்ப சாமி பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்து மசூதியில் தங்க வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது கர்நாடகா மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் கமலேஷ் கவுரி. இவர் பீமப்பா, சிவனந்த், கங்காதர், சித்து ஆகியோருடன் சேர்ந்து சபரிமலை அய்யப்ப சாமிக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார். இந்நிலையில் தான் அவர்கள் 5 பேரும் கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பைக்கில் புறப்பட்டனர். இவர்கள் பெலகாவியில் இருந்து கர்நாடகா-கேரளா எல்லையில் உள்ள கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்துக்கு வந்தனர்.
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாதுகா தித்திமத்தி கிராமத்தை அவர்கள் இரவு நேரத்தில் கடந்தனர். அப்போது அங்கு மழை பெய்ய தொடங்கியது. மழையில் நனைந்தபடி அவர்களால் மேற்கொண்டு இரவில் பைக் ஓட்டி பயணத்தை தொடங்க முடியவில்லை. இதனால் அவர்கள் நடுரோட்டில் தவித்து கொண்டிருந்தனர். அப்போது தான் அருகே மசூதி இருப்பதை அவர்கள் பார்த்தனர்.