25 வயதில் ஓய்வை அறிவிக்கலாம்.. குமுற விடும் பிசிசிஐ.. மன விரக்தியில் இந்திய வீரர்.. என்ன நடந்தது?
இந்திய ஒருநாள் அணியில் டபுள் செஞ்சுரி அடித்த வீரர்கள் ஐந்து பேர் மட்டுமே. சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில்.
இந்த ஐந்து பேரில் மூன்று பேர் ஜாம்பவான்களாக இந்திய அணியில் கோலோச்சினார்கள். சுப்மன் கில் தவிர்க்க முடியாத வீரராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். ஆனால், இஷான் கிஷன் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.
அவர் இதுவரை ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தாலும் அணியில் பிளேயிங் 11இல் ஒரு வீரராக அவருக்கு தொடர்ந்து இடம் அளிக்கப்படவில்லை. அவரை மாற்று வீரர் என்ற இடத்திலேயே வைத்து இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். இத்தனைக்கும் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவரால் இரண்டு பணிகளை செய்ய முடியும். அவர் விக்கெட் கீப்பிங் சரியில்லை என நினைத்தாலும் கூட ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக அவரை பயன்படுத்தலாம். அதற்கான அத்தனை தகுதிகளையும் அவர் கடந்த காலங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து நிரூபித்து இருக்கிறார்.
துவக்க வீரராக, மூன்றாம் வரிசை, நான்காம் வரிசை, ஐந்தாம் வரிசை என பேட்டிங்கில் எல்லா இடத்திலும் இறங்கி தன்னால் ரன் குவிக்க முடியும், அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட முடியும் என நிரூபித்து விட்டார். இந்த நிலையில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரை மாற்று வீரராகவே பயன்படுத்தும் திட்டத்தை பிசிசிஐ தேர்வுக் குழு செயல்படுத்தி வருவதாக தெரிகிறது. அதற்கு விராட் கோலியும் ஒருவகையில் காரணமாக இருக்கிறார்.
டி20 அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டாலும் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்பதால் அவர் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடுவது சந்தேகமாக இருந்தது. அதனால், இஷான் கிஷன் எப்படியும் அணியில் இடம் பெற்று மூன்றாம் வரிசை அல்லது நான்காம் வரிசையில் பேட்டிங் இறங்குவார் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருப்பதால், மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள். பேட்டிங்கில் ஆறாம் வரிசை அல்லது ஏழாம் வரிசை மட்டுமே மீதமிருக்கும். அந்த இடத்தில் ஒரு ஃபினிஷரை ஆட வைப்பதே சரியாக இருக்கும். எனவே, விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜிதேஷ் சர்மாவை அந்த இடத்தில் ஆட வைக்க தேர்வுக் குழு திட்டமிட்டு வருகிறது.
இந்த காரணத்தால் இஷான் கிஷன் என்னதான் நன்றாக ஆடி இருந்தாலும் மீண்டும் மாற்று வீரராக மாற்றப்படுவார் என கூறப்படுகிறது. 25 வயதே ஆகும் இஷான் கிஷனுக்கு இப்போது சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இனி எப்போது கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியில் மாற்று வீரராக இருந்தார். அடுத்து டெஸ்ட் அணியிலும் மாற்று வீரராக இருந்தார் இஷான் கிஷன். மாற்று வீரராகவே இருப்பதாலும், அணியில் இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாலும் மன சோர்வு ஏற்பட்ட நிலையில், அவர் தான் நீண்ட காலமாக இந்திய அணியுடன் பயணிப்பதால் சோர்வாக இருப்பதாக கூறி பாதி தொடரில் அணியில் இருந்து தாமாக விலகினார்.
தற்போது மீண்டும் அதே போலவே அவரை மாற்று வீரராக வைத்து இருந்தால் அவர் 25 வயதிலேயே ஓய்வு பெற்று விடலாம். அந்த அளவுக்கு பிசிசிஐ அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.