சத்தமில்லாமல் பூடானை கபளீகரம் செய்ய முயற்சி.. காட்டிக் கொடுத்த சேட்டிலைட் படங்கள்.. சிக்கிய சீனா

பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறது. சீனாவின் இந்த கனவுக்கு இந்தியாதான் கடும் போட்டியாக உள்ளது. தெற்காசியா நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனாவிற்கு இந்தியா கடும் சவாலாக உள்ளது.

ஆசியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது. இதனால், இந்தியா மீது எரிச்சல் அடையும் சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது.

பூடானில் ஆக்கிரமிப்பு: இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டி நவீன குடியிருப்புகளை அமைப்பது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தற்போது எல்லையில் நவீனமான முறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் தற்போது சீனா, பூடானில் சில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவது தெரியவந்துள்ளது. பூடானின் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருவது செயற்கை கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. பூடானின் கேன் பஜோங் பிராந்தியத்தில் உள்ள பேயுல் ஆற்று பள்ளத்தாக்கில் நகர குடியிருப்புகளை சீனா அமைத்து வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

நெருக்கடி கொடுக்கும் சீனா: இந்திய தலைநகர் டெல்லியின் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மக்கள் தொகை கொண்ட குட்டி நாடுதான் பூடான். அதாவது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 8 லட்சம் தான். இந்த குட்டி நாடான பூடானை சுரண்டி ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பூகோள ரீதியாக நெருக்கடி கொடுக்க சீனா முயற்ச்சிப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

பிராந்திய நலனை உறுதி செய்வோம்: பூடானுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மற்றொரு பக்கம் சீனா இப்படி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்தியாவுக்கான பூடான் தூதர், “தற்போதைய எல்லை பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது எங்கள் கொள்கையாக இருந்தாலும் பூடானின் பிராந்திய நலனை உறுதி செய்வோம் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *