வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேல்… திசை திரும்பும் போர்!
இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவின் முதன்மையான களங்களிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. அந்தப் பகுதிகளில் ஹமாஸின் கட்டுமானங்களை முற்றிலும் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
நான்காவது மாதத்தில் அடியெடுத்துவைக்கும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கைகளை மத்திய மற்றும் தெற்கு காஸாவில் விரிவுபடுத்தவுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் இஸ்ரேல் வருகைக்கு பின்னர் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலை வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைக் குறைத்துவிட்டு ஹமாஸுக்கு எதிரான நிலைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
காஸாவின் பெரும்பாலான மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர வற்புறுத்தப்பட்ட நிலையில் ராணுவத்தின் தெற்கு நோக்கிய தாக்குதல் அவர்களை இன்னும் குறுகிய இடத்திற்கு நகர்த்துகிறது.
மத்திய காஸாவின் நகரமான தெயிர் அல்-பலாவில் இருந்து மக்களை இடம்பெயரச் சொல்லி ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது.
கான் யூனிஸ் நகரத்தில் உள்ள நசீர் மருத்துமனைக்கு ஞாயிற்றுக்கிழமை 18 உடல்கள் கொண்டுவரப்பட்டன. 50-க்கும் அதிகமான பேர் கான் யூனிஸ் அகதிகள் முகாம் தாக்குதலில் காயமுற்றுள்ளனர்.
ஏற்கெனவே பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 22,700-ஐ கடந்துள்ளது. அக்.7 ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் தாக்குதல் நான்காவது மாதத்தின் தொடக்கத்திலும் தொடர்ந்து வருகிறது.