|

வட கொரிய தாக்குதல் எதிரொலி: வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென மக்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வட கொரியா துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், தீவுவாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

தென் கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் வட கொரியா துப்பாக்கிச்சூடு பயிற்சி நடந்தி வருவதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வட கொரியாவின் துப்பாக்கிச் சூடு சத்தம் இந்தபகுதிகளில் கேட்பதால் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தென் கொரிய அரசு அனைத்து மக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா வெள்ளிக்கிழமை திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது. தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல் தொடர்பாக பேசுகையில், “இது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து அமைதியை குலைக்கும் ஆத்திரமூட்டும் செயல்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் நீடித்து வரும்நிலையில், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட தென் கொரியா அண்மையில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சி மேற்கொண்டது. இந்த போர்ப்பயிற்சி நடைபெற்ற சில நாட்களில் வட கொரியா இந்தத் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *