சீனா காரங்க அடங்க மாட்டாங்க போலயே!! காப்பி அடிச்சு புதுசா ஒரு காரை உருவாக்கி இருக்காங்க – பெயர் என்ன தெரியுமா?
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Crusier) காரையும் விட்டு வைக்கவில்லையா என கேட்க தோன்றும் அளவிற்கு, இந்த காரை காப்பியடித்து அப்படியே அதன் தோற்றத்தில் சீனாவில் ஒரு கார் உருவாக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த போலி லேண்ட் க்ரூஸர் காரில் ஒரு சிறப்பு உள்ளது. அது என்ன என்பதையும், இந்த போலி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகளவில் பிரபலமான பல்வேறு கார்கள் சீனாவில் காப்பியடித்து உருவாக்கப்பட்டு உள்ளன. நமது செய்தித்தளத்திலேயே அவற்றை பலமுறை பார்த்துள்ளோம். அளவில் சிறிய மாருதி காரில் இருந்து ரோல்ஸ்-ராய்ஸ் கார் வரையில் கூட சீனாவில் காப்பியடித்து கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரின் தோற்றத்தை காப்பியடித்து ஒரு கார் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குலுஸே (Kuluze) என்ற பெயரில் சீனாவில் இந்த போலி லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லேண்ட் க்ரூஸர் கார்களின் சிறப்பம்சமே அவற்றின் கம்பீரமான தோற்றம் ஆகும். ஆனால், குலுஸே கார் ஆனது எந்தவொரு அளவிலும் லேண்ட் க்ரூஸருக்கு இணையானதாக இல்லை. நீளம், அகலம், உயரம் என அனைத்து பரிமாண அளவுகளிலும் வழக்கமான லேண்ட் க்ரூஸரை விட மிகவும் சிறியதாக உள்ளது.
எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் எந்த அளவில் இருக்குமே அதே அளவில் குலுஸே உள்ளது. ஆனால், காரின் டிசைன்கள் அனைத்தும் காப்பியடித்தாற் போன்று லேண்ட் க்ரூஸரை ஒத்துக் காணப்படுகின்றன. குறிப்பாக, காரின் முன்பக்கம் பெரிய அளவில் லேண்ட் க்ரூஸர் எல்சி300-ஐ ஒத்துள்ளது.
ஹெட்லேம்ப்கள், முன்பக்கத்தில் பெரிய கிரில் பகுதி உள்ளிட்டவை லேண்ட் க்ரூஸரில் இருந்து எடுத்து பொருத்தப்பட்டது போன்று உள்ளது. எல்சி300 காரில் இருப்பதை போன்று பம்பருக்கு கீழே காரின் உடல் நிறத்திலேயே ஸ்கிட் தட்டு உள்ளது. அதேபோன்று, காரின் பக்கவாட்டு பகுதியில் சதுர வடிவில் சக்கரங்களுக்கான வளைவுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று, காரின் உடல் நிறத்தில் கிளாடிங்குகள் குலுஸே காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றை லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரிலும் பார்க்க முடியும். சக்கரங்களின் டிசைனை மட்டும் சீன நிறுவனம் சொந்தமாக யோசித்துள்ளது. குலுஸே காரில் பொருத்தப்பட்டுள்ள சக்கரங்கள் விலை குறைவானவை போன்று எளிமையாக உள்ளன. அத்துடன், சக்கரங்களின் அளவும் இந்த சீன காரில் சிறியதாக உள்ளது. காருக்கு பின்பக்கத்திலும் எல்சி300 காரை போன்றதான டெயில்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, குலுஸே ஒரு எலக்ட்ரிக் கார் ஆகும். மற்றப்படி, இந்த சீன போலி காரை பற்றிய விபரங்கள் எதுவும் பெரியதாக வெளியாகவில்லை. காரின் உட்பக்க கேபினின் படங்கள் எதுவும் இணையத்தில் வெளியாகவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், ஸ்டாண்டர்ட் எல்சி300 காரை விட இந்த சீன போலி காரின் கேபின் வித்தியாசமானதாகவும், கூடுதல் மாடர்ன் வசதிகளை கொண்டதாகவும் இருக்கும்.
இருப்பினும், இப்படியொரு கார் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. அங்கு யாராவது செய்த மாடிஃபை காராக கூட இது இருக்கலாம். சீனாவில் கார்களை தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. அப்படியிருந்தும், இவ்வாறான புது, புது காப்பி-கேட் கார்களை சீனாவில் அடிக்கடி பார்க்க முடிகிறது.