“விசுவாசத்துக்கு மரியாதை இல்ல” – மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக ட்வீட் செய்தாரா பொல்லார்ட்.. உண்மை என்ன?
ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணி என்பதோடு, சந்தை மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். மேலும் அவர் தலைமையில் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்று சாதித்திருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த வருடத்துக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டு, அதிரடியாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சமூக வலைதளத்தில் உருவாக்கியது. மேலும் கணிசமான மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தை பின் தொடர்வதை நிறுத்தினர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா எப்படி ஒரு முகமாக இருந்தாரோ, அதே அளவிற்கு இன்னொரு முகமாக இருந்தவர் கரீபியன் கீரன் பொல்லார்ட். மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடியான வெற்றிகளில் இவருடைய பங்கு மிகப் பெரியது. மேலும் துணை கேப்டன் ஆகவும் பொறுப்பேற்று இருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுக்கு முன்பாகவே 2010 ஆம் ஆண்டு வந்த பொல்லார்ட், அடுத்த 13 ஆண்டுகள் 2022 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வீரராக இருந்து ஓய்வு பெற்றார். வேறு எந்த ஐபிஎல் அணிகளிலும் விளையாட மாட்டேன் என்று கூறி அவர் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சியாளர் குழுவில் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அவர் பல யூகங்களுக்கு வழிவகுக்கும் வகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு செய்தியை பதிவேற்றி இருக்கிறார். அந்தச் செய்தி ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சனம் செய்து பொல்லார்ட் வெளியிட்டதாக பலரும் கருதுகிறார்கள்.
அந்தச் செய்தியில் பொல்லார்ட் கூறும் பொழுது ” மழை நின்றதும் குடை எல்லோருக்கும் சுமையான ஒன்றாக மாறும். எப்பொழுது நாம் கொடுப்பதை நிறுத்துகிறோமோ, அப்பொழுதே விசுவாசமும் முடிவுக்கு வந்து விடுகிறது!” என்று பதிவு செய்திருக்கிறார். இதன் காரணமாக அவர் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துக்கு எதிராக இதைக் கூறியிருக்கிறார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்!