இந்தியாவில் வர்த்தக ரீதியிலான பைலட் உரிமம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ம் ஆண்டில் 39% அதிகரிப்பு.!
விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) சார்பில் 2023ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வர்த்தக ரீதியிலான பைலட் உரிமங்களின் எண்ணிக்கை என்பது 39 சதவீதம் அதிகரித்து 1,622ஆக பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 22.5 சதவீதம் பேர் பெண் விமானிகள் என்ற தகவல் சிறப்புகுரியதாகப் பார்க்கப்படுகின்றது.கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலும் டிஜிசிஏ வழங்கிய வர்த்தக ரீதியிலான பைலட் உரிமங்களின் எண்ணிக்கை 1,165 ஆகும். இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் அதிகபட்ச உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இதுதான் அதிகபட்சம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், “2022ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பைலட் உரிமங்களின் எண்ணிக்கை 1,165 ஆகும். இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை கடந்து மொத்தம் 1,622 உரிமங்கள் வழங்கப்பட்டன. இது 39.22 சதவீதம் அதிகமாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பைலட் உரிமம் பெற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து துறை சார்ந்து மகளிர் மேம்பாட்டிற்கு மத்திய அரசு கொடுத்து வரும் முன்னுரிமையின் விளைவாக இந்த மாற்றம் சாத்தியம் ஆகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இயக்கத்தில் உள்ள விமானப் போக்குவரத்து சேவைகளில் பணியாற்றும் விமானிகளில் 14 சதவீதம் பேர் பெண்கள் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக விமானப் போக்குவரத்து சேவை துறை பின்னடவை சந்தித்தது. அதற்குப் பிறகு, இந்தத் துறை துரிதமாக புத்துணர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது பைலட் உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் புதிய விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், விமானிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், நாட்டில் ஹெலிகாப்டர் சேவை சார்ந்த வணிகங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த நிலையில் ஹெலிகாப்டர் இயக்குவதற்கான உரிமம் மற்றும் பைலட் உரிமங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஹெலிகாப்டர்களுக்கான வர்த்தக உரிமங்களை வழங்கவும், பைலட்டுகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஏதுவாக புதிய பயிற்சி நிறுவனம் ஒன்றுக்கு டிஜிசிஏ அனுமதி அளித்துள்ளது. ஆன்மீக சுற்றுலா, வான்வழி ஆம்புலன்ஸ் சேவை, தனியார் நிகழ்ச்சிகள் போன்ற பல தேவைகளுக்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் முன்னாள் ராணுவ பைலட்டுகளை தவிர்த்த பிற பைலட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.