நடப்பாண்டில் Citroen நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள 3 லேட்டஸ்ட் கார்கள்! விவரங்கள் இங்கே
பிரபல பிரெஞ்சு கார் உற்பத்தி நிறுவனமான Citroen, இந்தியாவில் இந்த புதிய ஆண்டில் அதன் வாகன வரிசையை விரிவுபடுத்த தயாராக உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டில் Citroen நிறுவனம் அறிமுகப்படுத்திய eC3 மற்றும் C3 Aircross கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடப்பாண்டில் Citroen நிறுவனம் இந்தியாவில் புதிதாக 3 லேட்டஸ்ட் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் நிறுவனம் வரவிருக்கும் மாதங்களில் C3X ஹை-ரைட்டிங் செடான் மற்றும் ஆல்-எலெக்ட்ரிக் eC3 Aircross SUV உள்ளிட்ட கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த இரண்டை தவிர Citroen நிறுவனம் தனது C3 Aircross மற்றும் eC3 ஹேட்ச்பேக்கிற்கான ரீட்யூன் செய்யப்பட்ட எஞ்சினுடன் கூடிய 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலை அறிமுக்கப்படுத்த உள்ளதாக அறிக்கை கூறுகிறது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு ஏற்ப மற்றொரு ட்ரிம் ஆப்ஷனை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் Citroen நிறுவனம் இந்த கார்களின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
C3 ஏர்கிராஸ் மற்றும் C3 ஹேட்ச்பேக் ஆட்டோமேட்டிக்:
இந்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவரை வெளிப்படுத்துகிறது.குறிப்பாக மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் போக்குவரத்து சூழல் மோசமாக இருக்கும் நிலையில் இந்த டிரிம் ஸ்மூத்தான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோயன் சி3எக்ஸ் (Citroen C3X):
மிட்-சைஸ் செடான் லுக்கில் C3X மாடலை வெளியிட Citroen நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டிருக்கும். தவிர மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்று நன்கு விற்பனையாகி கொண்டிருக்கும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, VW விர்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற தயாரிப்புகளுக்கு போட்டியாக சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவரை வெளியிடுகிறது. இது 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
சிட்ரோயன் இசி3 ஏர்கிராஸ் (Citroen eC3 Aircross):
தனது வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான விருப்பங்களை வழங்கும் வகையில் Citroen நிறுவனம் தனது லைன்அப்பில் உள்ள C3 ஏர்கிராஸின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (eC3 Aircross) அறிமுகப்படுத்த உள்ளது. 29.2kWh பேட்டரியை கொண்டிருக்கும் eC3 ஹேட்ச்பேக் போலல்லாமல், வரவிருக்கும் புதிய eC3 Aircross காரானது பெரிய பேட்டரி, மோட்டார் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரேஞ்சை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.