5-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி.. பதைபதைத்த தெலங்கானா – வைரலாகும் திக் திக் வீடியோ
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கீதம் பல்கலைக்கழகம். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ – மாணவியர் பல துறைகளில் படித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரேணு ஸ்ரீ (18) என்ற மாணவி கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு கல்லூரியில் சேர்ந்த இவர், வழக்கம்போல் நேற்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது வகுப்பு முடித்து விட்டு மாலை நேரத்தில் மாணவி கல்லூரி வளாகத்தில் 5-வது மாடிக்கு தனது மொபைல் போனுடன் சென்றுள்ளார். அங்கே அவர் சுவற்றில் அமர்ந்துகொண்டு மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் சுவற்றின் மீது மொபைல் போனை கீழே வைத்து விட்டு, சுவற்றின் முன்னோக்கி நகர்ந்தார்.
பின்னர் அதில் இருந்து சட்டென்று கீழே குதித்தார். அவர் முன்னோக்கி நகர்வதை கண்ட சில மாணவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அவர் கீழே குதித்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் தூண்டுதலின் பெயரில் கீழே குதித்தாரா என்பது குறித்தும், அவரது மொபைல் போனை மீட்டும் விசாரித்து வருகின்றனர். தற்போது மாணவி கீழே குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.