எதுக்கு இந்த கேள்வி? பிடிஆர் சார் சொல்லிருப்பாரு.. இந்தி குறித்த கேள்விக்கு டென்ஷன் ஆன விஜய் சேதுபதி
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி, தன்னிடம் செய்தியாளர் இந்தி பற்றி கேள்வி எழுப்பியதால் டென்ஷன் ஆனார். இந்த கேள்விக்கு பிடிஆர் ஒரு விளக்கம் கொடுத்திருப்பார் போய் பாருங்கள் என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்திலும் நடித்த விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் தொடர்பாக மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு இந்தியில் சரளமாக பேசினார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், மெரி கிறிஸ்துமஸ் படக்குழு, சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய் சேதுபதி. அப்போது, சினிமாவிற்கு முன்பு துபாயில் சில காலம் வேலை பார்தேன். அப்போது இந்தி கற்றுக்கொண்டதன் பயன் தற்போது இந்தி படங்களில் நடிக்கும் போது வசனங்கள் பேச உதவுகிறது என்றார்.