இது தான் ரோகித், கோலிக்கு கடைசி வாய்ப்பு.. 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய இரு ஜாம்பவான்கள்
மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி ஜனவரி 11ஆம் தேதி மொகாலியிலும், ஜனவரி 14-ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி இந்தூரிலும், ஜனவரி 17ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் பெங்களூரிலும் நடைபெறுகிறது.
இந்த தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அணிக்கு திரும்பி இருக்கிறார். இதன் மூலம் 14 மாதங்களுக்குப் பிறகு ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக திரும்பியிருக்கிறார்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் இரு மூத்த வீரர்களும் அந்தத் தொடரில் விளையாடுவார்களா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இவ்விருவரும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்த டி20 உலக கோப்பையில் நிச்சயம் ரோகித் சர்மாவும் விராட் கோலி விளையாடுவார்கள் என தெரிகிறது.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை,பல டி20 உலக கோப்பையும் தவறவிட்டது. இதனால் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் ஒரு உலக கோப்பையில் விளையாடுவது என்பது இனி சந்தேகம் தான்.