மும்பை அணிக்கு தாவிய சிஎஸ்கே சிங்கம்.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. குமுறும் சென்னை ரசிகர்கள்!
மும்பை: ஐஎல்டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 203 போட்டிகளில் விளையாடி 4,348 ரன்களை விளாசியவர் அம்பாதி ராயுடு. இதுவரை ஐபிஎல் தொடரில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். 2008 முதல் 2017 வரை மும்பை அணிக்காக ஆடிய அம்பாதி ராயுடு, அதன்பின் 2018 முதல் 2023 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடினார். கடந்த சீசனுடன் ஓய்வை அறிவித்த அவர், கண்ணீருடன் விடைபெற்றார்.
அதன்பின் சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் பிசிசிஐ அனுமதியளிக்காது என்பதை அறிந்து, சிறிது இடைவெளி எடுத்து கொள்வதாக தெரிவித்தார். இதன்பின் அம்பாதி ராயுடு சிஎஸ்கே அணியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். 10 நாட்களுக்கு முன்பாக ஜெகன் மோகன் ரெட்டியின் எய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன் காரணமாக இனி உலகளவிலான லீக் போட்டிகளில் அம்பாதி ராயுடு விளையாட மாட்டார் என்று பார்க்கப்பட்டது. இதனிடையே திடீரென அரசியலில் இருந்து சில காலம் விலகி இருக்க போவதாக அறிவித்தார்.
இதற்கான காரணம் குறித்து அம்பாதி ராயுடு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஐஎல்டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அரசியலில் இருந்து விலக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஐஎல்டி20 லீக் தொடர் இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ளது.